தமிழகம்

ஜவ்வரிசி உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளிக்க அரசு பரிசீலனை: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

சேலம்

ஜவ்வரிசி உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளிக்க அரசு பரிசீலனை செய்துவருகிறது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

சேலத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

நமது மாவட்டத்தை பொறுத்தவரைக்கும், மரவள்ளிக் கிழங்கு அதிகமாக இருக்கின்ற பகுதி. அந்த மரவள்ளிக் கிழங்கை ஜவ்வரிசியாக மாற்றுவதற்கு இன்றைக்கு அதிக ஆலைகள் இருக்கின்றன. அந்த ஜவ்வரிசி உற்பத்தி செய்கின்ற ஆலை அதிபர்கள் சந்தித்து மனு கொடுத்திருக்கின்றார்கள். அந்த ஜவ்வரிசி உற்பத்தி செய்வதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள். விவசாய பெருங்குடி மக்களும், விவசாய சங்கங்களை சேர்ந்தவர்களும் என்னை சந்தித்து கோரிக்கை வைத்திருக்கின்றார்கள்.

விவசாயிகள் கோரிக்கை

தாங்கள் விளைவித்த பொருட்களை உரிய காலத்தில் விற்றால் தான் விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து தப்புவார்கள். ஆகவே, அதற்கு அனுமதி கேட்டிருக்கிறார்கள். அதுவும் அரசு பரிசீலனையில் இருக்கின்றது. 20-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டு மத்திய அரசு அனுமதி வழங்குகின்ற தொழிற்சாலைகளுக்கு இடம்பெற்றிருந்தால் அவர்களுக்கும் அனுமதி வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

சர்க்கரை ஆலைகளுக்கு அனுமதி

அதேபோல, சர்க்கரை ஆலைகளுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கி இருக்கின்றோம். ஆகவே, கரும்பு பயிரிட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இன்றைக்கு அந்த கரும்புகளை சர்க்கரை ஆலைகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. சர்க்கரை ஆலைகள் இயங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

உயர் மட்ட குழுவின் அறிக்கை

கேள்வி – 20ஆம் தேதிக்கு பிறகு தொழிற்சாலைகள் செயல்படும் என்று சொல்லியிருக்கிறார்கள் அதில் பணியாற்றும் தொழிலாளர்கள் எப்படி பணிக்கு வருவார்கள்?

பதில் – 20ஆம் தேதிக்கு பிறகு எல்லா தொழிற்சாலைகளும் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட வில்லை. என்னென்ன தொழிற்சாலைகள் இயக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது, இதற்கு தான் உயர்மட்டக் குழுவை நாங்கள் அமைத்திருக்கிறோம். அந்த உயர்மட்டக் குழு ஆய்வு செய்து எந்ததெந்த தொழிற்சாலைகளை துவக்குவதற்கு அனுமதி கொடுக்கலாம் என்று திங்கட்கிழமை அறிக்கை சமர்பிக்க உள்ளது, அதன் அடிப்படையில் அரசு அறிவிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து தொழிற்சாலைக்கும் அனுமதி கிடையாது

கேள்வி – ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் தொழிலாளர்கள் வந்து செல்வதற்கு அனுமதி சீட்டு வழங்கப்படுமா?

பதில் – அதாவது கிராமப்புறங்களில் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு எந்தவித தடையும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. நகர்ப்புற பகுதிகளிலே தடை செய்யப்பட்ட பகுதி என்று நம்முடைய சேலம் மாவட்டம் என்று எடுத்துக் கொண்டால், மாநகராட்சியிலே 4 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புறநகர் பகுதி என்று சொன்னால் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் 5 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக இருக்கின்றது. இந்த பகுதிகளில் எல்லாம் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படாது. இவ்வாறு தெரிவித்தார்.