தற்போதைய செய்திகள்

அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் – அமைச்சர் ஆர்.காமராஜ் எச்சரிக்கை

திருவாரூர்

அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ அல்லது பதுக்கலில் ஈடுபட்டாலோ தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் நல வாரிய உறுப்பினர்களுக்கு விலையில்லா நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி திருவாரூர் விளமல் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் கட்டுமான தொழிலாளர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் நல வாரிய உறுப்பினர்களுக்கு விலையில்லா நிவாரணப் பொருட்களை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கி துவங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து மே மாதத்திற்கான அரிசி, பருப்பு, ஆயில் உள்ளிட்ட பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி ஒரு நாளைக்கு 150 டோக்கன் வீதம் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து முதல்வர் அறிவித்த உடன் அந்த தேதியில் இருந்து பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் ஆகியோர்களுக்கு 15 கிலோ அரிசி மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த பணியானது இன்று திருவாரூரில் துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திருவாரூர் மாவட்டத்தில் 29,000 பேர் பயனடைய உள்ளார்கள்.

அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ அல்லது பதுக்களில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும். விவசாய பணிகளில் ஈடுபடுவோருக்கு எவ்வித பிரச்சனையும் கிடையாது. அவர்களுடைய அங்கீகார கடிதத்துடன் அவர்கள் பணிக்கு செல்லலாம்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிரவித்தார்.