தற்போதைய செய்திகள்

கொட்டும் மழையிலும் மக்களை சந்தித்து குறைகேட்ட அமைச்சர்

நாமக்கல்

மழை என்றும் பாராமல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி பகுதியில் மக்களின் குறைகளை அமைச்சர் பி.தங்கமணி கேட்டறிந்தார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இல்லந்தோறும் அம்மாவின் அரசு என்னும் பெயரில் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதன்படி, காலை குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட 7-ஆவது வார்டு அரசு பள்ளி சாலை மற்றும் 4-ஆவது வார்டு பாலிக்காடு ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அமைச்சர் பி.தங்கமணி பெற்றுக்கொண்டார். காலை முதலே தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்த போதிலும் மழை என்றும் பாராமல் அமைச்சர் பி.தங்கமணி பொதுமக்களின் வீடு வீடாக நேரில் சென்று அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, அவர்களின் குறைகளை உடனுக்குடன் களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, மின் இணைப்பு பெயர் மாற்றம் புதிய மின் இணைப்பு வழங்குதல், நலிந்தோர் நலத்திட்டங்கள் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள்மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்குமாறு அரசு துறை அலுவலர்களுக்கு அமைச்சர் பி.தங்கமணி அறிவுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 25 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளையும் அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்.