தற்போதைய செய்திகள்

குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் உறுதி

திருப்பூர்

குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியராக அலுவலக வளாகத்தில், திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்படவுள்ள அதிநவீன கிருமிநாசினி விசை தெளிப்பானை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை.கே.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

அப்போதுஅவர் தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் உத்தரவின்படி, கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் நமது மாவட்டத்தில் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் அறிவித்துள்ள அறிவுரைகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய தேவைகளும் கிடைத்திட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சுகாதாரத்தை காக்கும் வகையில் கிருமி நாசினிகள் தெளிப்பதற்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளில் பயன்படுத்துவதற்காக ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன கிருமி நாசினி விசை தெளிப்பான் பயன்படுத்தப்படவுள்ளன.

இவ்வாகனத்தில், ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதால் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்ட பகுதிகள் கண்காணிக்கப்பட்டு முறைப்படுத்தப்படுகிறது. இவ்வாகனம் தினசரி காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மற்றும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் இரு வேளைகளிலும் இயக்கப்படுகிறது. இதனை சரியாக பயன்படுத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது/

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

முன்னதாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திருப்பூர் சாய ஆலைகள் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையினையும், திருப்பூர் கைலாஸ் மார்பிள்ஸ் சார்பில் ரூ.2 லட்சத்திற்கான காசோலையினையும், திருப்பூர் குஜராத்தி சமாஜ் சங்கம் சார்பில் ரூ.1 லட்சத்திற்கான காசோலையினையும் மற்றும் திருப்பூர் பட்டேல் சமாஜ் சங்கம் (உமயா மஹால் ) ரூ.1 லட்சத்திற்கான காசோலையினையும் என ரூ.14 லட்சத்திற்கான காசோலையினை அமைச்சர் உடுமலை.கே.ராதாகிருஷ்ணனிடம் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.