தற்போதைய செய்திகள்

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்த 30பேர் வீடு திரும்பினர்

சென்னை

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து 30பேர் நேற்று வீடு திரும்பினர்.

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையிலிருந்து டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 95 பேர் சென்னை ஓமந்தூரார் அரசுசிறப்பு மருத்துவமனையில் அமைக்கப்பட்ட சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு ஓமந்தூரர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் நாராயணபாபு தலைமையிலான மருத்துவ குழுவினர் தமிழக சுகாதாரத்துறை அறிவித்த செயல் திட்டங்களின் படி சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30 பேர் குணமடைந்தனர். கடந்த 2 நாட்களாக அவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் 30 பேரும் நேற்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் நாராயணா பாபு, அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கி 30 பேருக்கும் பழங்கள் மற்றும் தேவையான பொருட்களை வழங்கி வழியனுப்பி அனுப்பி வைத்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த மருத்துவ அதிகாரி ரமேஷ்பாபு மற்றும் மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் கைகளை தட்டி அவர்களை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். நேற்று வீடு திரும்பும் 30 பேரும் தங்கள் வீடுகளில் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்என்றும் மருத்துவர்கள் வழங்கிய ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து சிறப்பு வாகனம் மூலம் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.