மதுரை

ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளரை மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்க முடிவு – வி.வி.ராஜன் செல்லப்பா தலைமையில் தீர்மானம்

மதுரை,

கழக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரை மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்ய மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக தொண்டர்கள் மாவட்ட கழக செயளாலர் வி.வி.ராஜன்செல்லப்பா தலைமையில் தீர்மானம் நிறைவேற்றினர்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் திருப்பரங்குன்றத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மறைவிற்கு பின் கழகத்தை வழிநடத்த 12.9.2017 அன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு உருவாக்கப்பட்டு பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டிருக்கும் அனைத்து பொறுப்புகளும், அதிகாரங்களும் கழக ஒருங்கிணைப்பாளருக்கும், கழக இணை ஒருங்கிணைப்பாளருக்கும் முழுமையாக அளித்து இருவரும் இணைந்து செயல்பட பொதுகுழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராமர், லட்சுமணனாய் இருந்து கழகத்தை கண் இமைபோல் ஒருங்கிணைப்பாளர்கள் காத்து வருகின்றனர்.

கடந்த 1.12.2021 அன்று தலைமை கழகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணத்தை நனவாக்கும் வகையில் சட்ட விதிகள் திருத்தப்பட்டு கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பளர் ஆகியோரை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று சட்ட திட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கழகங்களும் முழு மனதுடன் வரவேற்கிறது.

கழக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வத்தையும், கழக இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியையும் மீண்டும் தேர்வு செய்ய மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.