தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலையில் காவலர்களுக்கு முக கவசம், கிருமிநாசினி – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு முக கவசம் மற்றும் கிருமிநாசினிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசின் பல்வேறு முன்னேற்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும் மாவட்டம் முழுவதும் நடைபெறும் தடுப்பு நடவடிக்கைகளை தினம்தோறும் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு தக்க அறிவுரைகளை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கி வருகிறார்.

மாவட்ட எல்லைகள் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு 5 ஆயிரம் முக கவசம் மற்றும் கிருமிநாசினிகளை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், நகர துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரையிடம் நேற்று வழங்கினார். முன்னதாக மருத்துவ பணியாளர்கள் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் மற்றும் சேனிடைசர் ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார்.

இதனை தொடர்ந்து ராஜகோபுரம், மார்க்கெட் பகுதி, பெரிய தெரு, திருவூடல் தெரு, சன்னதி தெரு ஆகிய பகுதிகளில் நகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.