கரூர்

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 48 பேர் வீடு திரும்பினர் – கரூர் ஆட்சியர் கை தட்டி வழியனுப்பி வைத்தார்

கரூர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டு பூரண குணமடைந்த 48 நபர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர். கூடுதல் காவல்துறை இயக்குநர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர்; கைதட்டி வழியனுப்பி வைத்தனர்.

கரூர், நாமக்கல் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்களின் தொடர் சிகிச்சையின் காரணமாக 48 நபர்கள் பூரண குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

கரூர், நாமக்கல் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்கான கண்காணிப்பு அலுவலர்கள் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் சி.முனியநாதன் மற்றும் கூடுதல் காவல்துறை இயக்குநர் (சிலை கடத்தல் தடுப்பு பிரிவு) அபய்குமார்சிங், மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன்.ஆகியோர் அனைவருக்கும் பழக்கூடை கொடுத்து வாழ்த்து தெரிவித்து கைதட்டி வழியனுப்பி வைத்தனர்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் என அனைவரும் சமூக விலகலை கடைபிடித்து வரிசையாக நின்று குணமடைந்தவர்களை கைத்தட்டி வழியனுப்பி வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில், போக்குவரத்துத்துறை அமைச்சரின் தொடர் முயற்சியால் கரூர் மாவட்டத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த அரசு மருத்துவக்கல்லூரி என்பது இன்றைய சூழலில் ஒரு வரப்பிரசாதமாக இருக்கின்றது.

உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புடன் கூடிய மருத்துவக்கல்லூரியில் உயர்தரமான சிகிச்சைகளை மருத்துவர்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றார்கள். அதனால் தான், கரூர் மட்டுமல்லாது நாமக்கல் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இத்தகைய சூழலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்களில் மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் பூரண குணமடைந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 நபர்களும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 33 நபர்களும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 13 நபர்களும் என மொத்தம் 48 நபர்கள் இன்று அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தூக்கம் இழந்து இரவு பகலாக அர்ப்பணிப்பு உணர்வுடன், தங்களது உயிரையும் பணயம் வைத்து சமூக நலனுக்காக பணியாற்றி வரும் கரூர் மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் என அனைவருக்கும் இந்த வெற்றி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அனைவரது கூட்டு முயற்சியாலும், முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் தினந்தோறும் காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உடலில் ஏற்படும் முன்னேற்றம் குறித்தும் தொடர்ந்து தகவல்களை கேட்டறிந்து தக்க அறிவுரைகளை வழங்கி வருவதால் இத்தகைய வெற்றி கரூர் மாவட்டத்தில் சாத்தியமாயிற்று.அனைவரின் கூட்டு முயற்சியால் விரைவில் கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லை என்ற நிலையினை உருவாக்க அனைவரும் தொடர்ந்து பாடுபடுவோம்.

இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

பின்னர் அயராது உழைக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் பழக்கூடைகளை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.