தற்போதைய செய்திகள்

பயிர்சேதம்- கால்நடை உயிரிழப்பு கணக்கெடுப்பை விடியா தி.மு.க. அரசு முழுமையாக நடத்தவில்லை

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

மதுரை

பயிர் சேதம் மற்றும் கால்நடைகள் உயிரிப்புகள் கணக்கெடுப்பை விடியா தி.மு.க. அரசு முழுமையாக நடத்தவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகமார் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பேரையூர், மறவன்குளம், கல்லுப்பட்டி, கள்ளிகுடி பகுதிகளை நேற்று முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவருடன் திருமங்கலம் நகர கழக செயலாளர் ஜெ.டி.விஜயன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்செல்வன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராமகிருஷ்ணன், திருமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் லதா ஜெகன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

இதன் பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏறத்தாழ 5 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், மக்காச்சோளம், சூரியகாந்தி, பருத்தி, மற்றும் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 10,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

இதற்கெல்லாம் உரிய கணக்கெடுப்பு பணிகளை தி.மு.க. அரசு மேற்கொள்ளவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே உரிய முறையில் மறுபடியும் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொண்டு இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டோருக்கு அரசு வழங்க வேண்டும்.

பேரையூர் அருகே சந்தையூரில் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் காஞ்சாரை நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. 500 ஏக்கரில் சின்ன வெங்காயம், 100 ஏக்கரில் கடலை பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஆகவே இதை எல்லாம் கணக்கீடு செய்து உரிய முறையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

திருமங்கலம் அருகே மறவன்குளத்தில் உள்ள அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதி கட்டடம் சேதமடைந்துள்ளது. இதனால் மாணவிகள் அரசு கள்ளர் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மறவன்குளம், குதிரைசாரி கண்மாய்களில் நீர் நிரம்பியதால் இந்த கல்லூரி வளாகத்திற்குள்
தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் கல்லூரிக்குள் செல்ல முடியாத நிலை இருக்கிறது. எனவே தேங்கிய நீரை வெளியேற்றி, கட்டிடங்களை சீரமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.