சிறப்பு செய்திகள்

ஊரடங்கு கட்டுப்பாடு மே 3-ம்தேதி வரை நீடிக்கும் – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

15.4.2020 அன்று மத்திய அரசு வெளியிட்ட ஆணையில், 20.4.2020க்குப் பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பது பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானா, மகாராஷ்ட்ரா, குஜராத் போன்ற மாநிலங்கள், தற்போதுள்ள கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலினை கருத்தில் கொண்டு, நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து கடைபிடிக்க முடிவெடுத்துள்ளன.

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்வு செய்வது குறித்து ஆராய, 16.4.2020 அன்று ஒரு வல்லுநர் குழுவை தமிழ்நாடு அரசு நியமித்து ஆணையிட்டு இருந்தது. அக்குழு, முதல் கூட்டத்தை நடத்தி, அதனுடைய முதற்கட்ட ஆலோசனைகளை முதலமைச்சரிடம் இன்று (நேற்று) (20.4.2020) சமர்ப்பித்தது. இந்தக் குழுவின் ஆலோசனைகள் கவனமாக ஆராயப்பட்டன.

அதன் அடிப்படையில், நோய்த்தொற்று மேலும் பரவுவதை தடுக்க கடும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டியுள்ளதால், மாநில பேரிடர் மேலாண்மை சட்டம்-2005ன்படி தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள 3.5.2020ம் தேதி வரை தொடர்ந்து கடைபிடிக்க தமிழ்நாடு அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகள் மற்றும் சேவைகளுக்கு ஏற்கனவே அரசால் அளிக்கப்பட்ட விதி விலக்கு தொடரும். நோய்த் தொற்றின் தன்மையை மீண்டும் ஆராய்ந்து, நோய்த் தொற்று குறைந்தால், வல்லுநர் குழுவின் ஆலோசனையினை பெற்று, நிலைமைக்கு ஏற்றாற்போல் தகுந்த முடிவுகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.