தமிழகம் தற்போதைய செய்திகள்

திருவாரூரில் 5 அம்மா உணவகங்களில் இலவச உணவு – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட கழகம் ஏற்பாட்டில் 5 அம்மா உணவகங்களில் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலைய வளாகத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் திருவாரூர் மாவட்ட கழகம் சார்பில் விலையில்லா அரிசி மளிகை பொருட்கள் காய்கறி உள்ளிட்ட பொருள்களை தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் நலவாரிய சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

ஏழை எளிய மக்கள் மற்றும் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள அடித்தட்டு மக்கள் தங்களது வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றமடைய வேண்டும் என ஆட்சி நடத்தியவர் அம்மா அவர்கள். அம்மா வழியில் அம்மா தந்த திட்டங்களை அப்படியே தந்து அவர்களின் சிந்தனைகளையும் கொள்கைகளையும் மனதில் கொண்டு ஆட்சி செய்து வருபவர் முதல்வர் எடப்பாடியார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகின்ற வேளையில், தமிழக மக்களை நோய்த் தொற்றிலிருந்து காப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. மேலும் கோரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பதற்காக இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையிலுள்ள இந்த நிலையில் தமிழக அரசு மக்கள் எந்த விதத்திலும் பாதிப்படைய கூடாது என்பதற்காக அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இந்த வகையில் மக்கள் எந்த நிலையிலும் பாதிக்கக்கூடாது என்பதற்காக மக்களை தேடி சென்று பல்வேறு உதவிகளை அ.இ.அ.தி.மு.க செய்து வருகின்றது, மக்களைத் தேடிச் சென்று உதவுகின்ற ஒரே இயக்கம் அ.இ.அ.தி.மு.க. முதலமைச்சர் சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சேலம் மாவட்ட கழகம் சார்பில் விலையில்லாமல் வழங்கப்படும் அறிவித்தார்

அதேபோல முதலமைச்சரின் உத்தரவுக்கு இணங்க திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் திருவாரூர் ஆகிய இடங்களில் உள்ள அம்மா உணவகங்களிலும், திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் உள்ள அம்மா உணவகத்திலும் என மொத்தம் 5 அம்மா உணவகங்களில் திருவாரூர் மாவட்ட கழகம் சார்பில் பொதுமக்களுக்கு விலையில்லாமல் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.