தற்போதைய செய்திகள்

கரூரில் ரூ.500க்கு மளிகை தொகுப்பு விற்பனை- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

கரூர்

கரூர் மாவட்ட நியாய விலைக்கடைகளில் ரூ.500க்கு 19 வகையான மளிகைப்பொருட்கள் விற்பனையை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமையில் துவக்கி வைத்தார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு அமுலில் உள்ளதால், ஏழை-எளிய மக்களின் உணவுக்கான தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் முதலமைச்சர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் முதலமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில் ஏப்ரல் மாதத்திற்கான உணவுப்பொருட்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லாமல் வழங்கப்பட்டது. மேலும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டது.

மேலும் ஊரடங்கு விரிவுபடுத்தப்பட்டதின் காரணமாக மே மாதத்திற்கான உணவு பொருட்களை ஏப்ரல் மாதமே குடும்ப அட்டை வைத்துள்ள பொதுமக்களுக்கு நியாய விலைக்கடைகளில் விலையில்லாமல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்காக 24.04.2020 மற்றும் 25.04.2020 ஆகிய இரண்டு நாட்கள் வீடு, வீடாக டோக்கன் வழங்கப்பட உள்ளது. அந்த டோக்கனில் பொருட்கள் வழங்கப்படும் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

தற்போது பொதுமக்களின் நலன் கருதி ரூ.500 மதிப்பில் 19 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத்தொகுப்பை நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில் நேற்று தாந்தோணிமலை மாரியம்மன் கோவில் அருகே உள்ள நியாய விலைக்கடையில் தமிழக அரசின் சிறப்பு மளிகைத் தொகுப்பை பொதுமக்களுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பாண்டியராஜன், கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ம.கீதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.காந்திநாதன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் வ.சந்தியா, கரூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் வி.சி.கே.ஜெயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.