தற்போதைய செய்திகள்

கர்நாடகா சுற்றுலா பயணிகளை புதுவையில் அனுமதிக்கக்கூடாது- கழக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தல்

புதுச்சேரி, டிச. 4-

ஒமிக்ரான் வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற கர்நாடகா சுற்றுலா பயணிகளை புதுவையில் அனுமதிக்கக்கூடாது என்று முதலமைச்சர் ரங்கசாமிக்கு கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

உலகை அச்சுறுத்துகின்ற வகையில் 50 வகையான உருமாற்றங்களுடன் பரவி வரும் புதிய வகை தொற்று நோயான “ஓமிக்ரான்” மிகவும் அபாயகரமானது என உலக மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்ததன் அடிப்படையில் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தற்போது இந்தியாவில், குறிப்பாக கர்நாடகாவில் இருவருக்கு இந்நோய் வந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் அந்த இருவருடன் தொடர்பில் இருந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நோய் பரவும் வீரியத்தை கருத்தில் கொண்டு உலக சுகாதார மையமும், இந்திய விஞ்ஞான கழகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

புதுச்சேரி மாநிலத்தில் வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் வெளி மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

புதுச்சேரி மாநிலத்திற்கு ரயிலின் மூலம் பெங்களூருவில் இருந்து சுமார் 3000-க்கும் மேற்பட்டோரும், பேருந்துகள், நான்கு சக்கர வாகனங்கள் மூலம் 1000-க்கும் மேற்பட்டோர்கள் கர்நாடகாவிலிருந்து வருகின்றார்கள்.

எனவே ரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் புதுச்சேரி எல்லைகளுக்கு உட்பட்ட இடங்களில் வாகன பரிசோதனையுடன் கூடிய மருத்துவ சான்றுகளை ஆய்வு செய்தும், அவர்கள் ஏற்கனவே கொரானோ தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியவர்களா என்பதை காவல்துறை ஆய்வு செய்து தீவிர பரிசோதனைக்கு பிறகு புதுச்சேரியில் அரசின் வழிகாட்டுதல்களுடன் கூடிய கட்டுப்பாட்டுடன் தங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர்களை எவ்வித சமசரசங்களுக்கு இடமில்லாமல் அவர்களை அவர்களின் ஊருக்கே திருப்பி அனுப்பிட வேண்டும்.

ஏற்கனவே கொரானோவால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் ஒரு வைரஸ் பரவலை எதிர்கொள்ளாத வகையில், புதுச்சேரி அரசு உரிய கட்டமைப்பு வசதிகளை எடுக்க வேண்டும். புதுச்சேரிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளை கண்காணிக்கின்ற வகையில் ஒரு மருத்துவக் கண்காணிப்பு குழுக்களை உடனடியாக அரசு நியமிக்க வேண்டும். குறிப்பாக புதுவை ரயில் நிலையத்தில் ஒரு பிரத்யேக மருத்துவ குழு அமைத்து உரிய பரிசோதனைக்கு பிறகு பெங்களுருவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை வெளியில் அனுப்ப வேண்டும்.

2 முறை தடுப்பூசி போடாதவர்கள் நோய் தொற்று அறிகுறி உள்ளவர்கள் யாரையும் நமது மாநிலத்திற்குள்ளே அனுமதிக்கக் கூடாது. சுற்றுலா மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தை விட புதுச்சேரி மாநில மக்களின் உயிர் விலை மதிப்பில்லாதது என்பதை அரசு உணர வேண்டும்.

எனவே முதலமைச்சர் புதுவை மாநில மக்களின் நலன் கருதி உடனடியாக காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட துறைகளின் உயரதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி சுற்றுலா சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சுற்றுலா பயணிகள் தங்கும் ஓட்டல் மற்றும் விடுதி உரிமையாளர்களுக்கு போதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.