தற்போதைய செய்திகள்

மருத்துவர், செவிலியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிப்பு – பதக்கம் வழங்கி நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ

திருவண்ணாமலை

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் 24 மணி நேரமும் தங்களது குடும்ப உறவுகளை மறந்து பொதுமக்களுக்கு பணி செய்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு பொன்னாடை, பதக்கம் அணிவித்து, சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம்
கைகூப்பி வணங்கி நன்றி தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகின்றது. தற்போது கொரோனா தொற்று உலக மக்களை அச்சுறுத்தி வரும் வேலையில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்களை காக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அரும்பாடுபட்டு வருகின்றனர்.

24 மணி நேரமும் தங்களது குடும்ப உறவுகளை மறந்து அர்ப்பணிப்பு உணர்வோடு பொது மக்களுக்காக பாடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரின் சேவையை பாராட்டும் வகையிலும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் அவர்களை பாராட்டி, மருத்துவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும், பரிசுப்பொருட்கள் மற்றும் பாராட்டு பதக்கத்தினை அளித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டி கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் பூமி தினத்தில் பூமியில் இவர்களின் தன்னலமற்ற மருத்துவ சேவைகளை பாராட்டி அவர்களுக்கு கைகூப்பி வணங்கி நன்றியினையும் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தெரிவித்ததுடன் கலசப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு கபசுர குடிநீர் பவுடர் மற்றும் கிருமிநாசினி முக கவசம் வழங்கி பொதுமக்களுக்கு மேலும் பணிசெய்யும் வகையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் காவல்துறையினரிடம் உற்சாகத்தினையும், உந்துதலையும் ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, கூட்டுறவு சங்க தலைவர் மண்ணு, ஒன்றிய கவுன்சிலர் மலர் பழனி, வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு, மருத்துவ அலுவலர் ஜீவராணி, காவல் துறை அலுவலர்கள் சுகாதாரப் பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.