தற்போதைய செய்திகள்

மீனவர்களுக்கு தலா ரூ.5ஆயிரம் அளிக்க ரூ.232 கோடி ஒப்பளிப்பு வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை – அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்

சென்னை

ஊரடங்கின் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு சிறப்பு நிவாரண நிதியாக தலா ரூ 5ஆயிரம் வழங்கிட ரூ 232 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்க மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையால் தமிழகத்தில்அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் போது மீன்வளத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

கொரோனா வைரஸ் நோய் தொற்றின் சர்வதேச பரவல் காரணமாக, அதன் பரவலைதடுத்திடும் வகையில் சமூக விலகலை பின்பற்றிடவும் எடுக்கப்பட வேண்டியநடவடிக்கைகள் குறித்து பல்வேறு அறிவுரைகள் அரசினால் வழங்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக கடலோர மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுத்திடும் பொருட்டு அனைத்து மீனவர்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முடிந்தவரை அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் மீன்வளத்துறை மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 5000 மீன்பிடி விசைப்படகுகள்,33200 இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகள் மற்றும் 4800 பாரம்பரிய நாட்டுப்படகுகளின் இயக்கம் மீனவர்களால் முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

முழு ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள, முழுநேர கடல்மீனவர்கள், மீன் சந்தை படுத்துதல் மற்றும் மீன் விற்பனையில் ஈடுபட்டுள்ளமீனவ மக்கள், கடல் மீன்பிடிப்பு சார்ந்த உபதொழிலில் ஈடுபட்டுள்ள மீனவ தொழிலாளிகள், மீன்பிடிப்பு சார்ந்துள்ள கூலி பணியாளர்கள், முழுநேர உள்நாட்டு மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு மீனவர்கள், உள்நாட்டுமீன் விற்பனை மற்றும் உபதொழிலில் ஈடுபட்டுள்ள மீனவ மக்கள்,உள்நாட்டு மீன்வளர்ப்பு விவசாயிகள் மற்றும் இறால் வளர்ப்பு விவசாயிகள் ஆக மொத்தம் தமிழகத்தில் 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவமக்களுக்கு சிறப்பு நிவாரண நிதியாக தலா ரூ.5000- வீதம் வழங்கிட ஏதுவாக மொத்தம் ரூ.232 கோடி- நிதி ஒப்பளிப்பு வழங்கிட கோரி மத்திய அரசுக்குகருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி விசைப்படகு மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தினை ஓரளவுக்கு குறைத்திடும் நோக்கில், 2020ம் ஆண்டிற்கான மீன்பிடி தடைகாலத்தினை கிழக்கு கடற்கரை பகுதியில் அமல்படுத்தப்படும் மீன்பிடித் தடைகாலத்தினை ஊரடங்கு துவங்கிய நாள் (அதாவது24.03.2020) அன்று முதல் முன்கூட்டியே கணக்கில் எடுத்துக் கொள்ளவும் மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தும் போது ஊரடங்கு காலத்தினை கழித்துக் கொண்டு மீன்பிடி தடைகாலம் கடைபிடிக்க ஏதுவாக உரிய ஆணைகள் வழங்கிட வேண்டி மத்திய அரசினை வலியுறுத்துமாறு பிற கடலோர மாநில மற்றும் யூனியன் பிரதேச மீன்பிடித்துறை அமைச்சர்களுக்கு நான் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளேன் மேற்கூறிய கருத்துரு மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.