கரூர்

கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரைந்த குழுவினருக்கு நிதியுதவி – கரூர் ஆட்சியர் வழங்கினார்

கரூர்

கொரோனா பரவல் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான ஓவியங்களை தாமாக முன்வந்து ஆர்வமுடன் வரைந்த ஓவியர்களுக்கு ரூ.15,000 நிதி உதவியை கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் வழங்கினார்.

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

நகராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ஆட்டோ மூலம் ஒலிபெருக்கி வாயிலாகவும், கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா பரவலை தடுப்பது குறித்த துண்டுபிரசுரங்கள் வழங்கியும், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு பிரத்யேகமாக கொரோனா பரவலை தடுக்கும் வகையிலும், உளவியல் ரீதியான தைரியமூட்டும் வகையிலுமான செய்திகள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகளில் தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கொரோனா பரவல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓவியர்கள் 13 நபர்கள் இணைந்து பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரவல் குறித்தும் அதிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அரசு தெரிவிக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும் விளக்கும் வகையிலும், முதலமைச்சர் கூறிய ‘‘விழித்திரு, விலகியிரு, வீட்டில்இரு” என்ற விழிப்புணர்வு வாசகங்களை கொண்டு சாலைகளில் வண்ணமயமான கண்ணையும், மனதையும் கவரும் வகையிலான ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.

தற்போதைய நிலையில் ஓவியர்களுக்கு அதிக பணிகள் இல்லாததால் பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையில் இருந்தாலும், மக்களுக்கு கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் கரூர் மாவட்டத்தைச்சேர்ந்த 13 ஓவியர்கள் ஒன்றிணைந்து ராயனூர், செல்லாண்டிபாளையம், புலியூர், வெள்ளியணை, கரூர் பேருந்து நிலைய மனோகரா ரவுண்டானா, தாந்தோணி கோவில் நுழைவுவாயில், அரசு கலைக்கல்லூரி நுழைவுவாயில், திருமாநிலையூர், பசுபதிபாளையம் காவல்நிலையம் முன்புறம் என கொரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்துள்ளனர்.

அந்த வகையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக முகப்பில் இதுபோன்ற ஓவியங்களை வரையவேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அனுமதி கேட்டுள்ளனர். ஓவியம் வரையும் போது சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுரை கூறி அவர்களுக்கான அனுமதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 13 ஓவியர்கள் இணைந்து வண்ணமயமான ஓவியத்தை வரைந்து கொண்டிருப்பதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்களை அழைத்து பேசியதோடு அவர்கள் பொதுமக்களின் நலன்கருதி ஓவியர்கள் ஒன்றிணைந்து விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டிருப்பது பாராட்டுக்குரியது என்று வாழ்த்து கூறினார்.

மேலும் ஓவியங்களை வரைவதற்கு ஆகும் செலவினை யார் வழங்குகின்றார்கள் என்று கேட்கும்போது, ஒரு இடத்தில் இதுபோன்ற ஓவியம் வரைய சுமாமர் 5,000 ரூபாய் செலவாகும், பொதுமக்களின் நலன் கருதி ஓவியர்களே இந்த செலவினை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், ஓவியர்களுக்கென்று ஒருகாலத்தில் சங்கம் இருந்தது. தற்போது ஓவியம் வரையும் தொழில் நலிவடைந்துள்ளதால் வேறு தொழில்களில் ஈடுபடத்துவங்கி விட்டனர். இன்றைய சூழலில் கொரோனா என்ற கொடிய நோயின் தாக்கத்தை பொதுமக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என்ற நோக்கத்தில் ஓவியர்கள் ஒன்றிணைந்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

அவர்களின் தன்னலம் கருதாத பணியினை பாராட்டிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பேருந்து நிலையம், இரயில் நிலையம் அமைந்துள்ள பகுதிகளிலும் இதுபோன்ற விழிப்புணர்வு ஓவியங்களை வரையுங்கள் என்று தெரிவித்ததோடு, ஒரு இடத்தில் ஓவியம் வரைவதற்கு தலா ரூ.5,000 வீதம் மூன்று இடங்களில் வரைவதற்கு ரூ.15,000 வழங்க உடனடியாக உத்தரவிட்டார்.

இந்நிலையில், மேற்சொன்ன இடங்களில் ஓவியங்களை வரைந்து முடித்த 13 பேர் அடங்கிய ஓவியர் குழுவிற்கு ரூ.15,000 நிதியை மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார். அரசு சுவர்களில் வரலாற்று சிறப்புமிக்க, பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலான, கருத்துச்செறிவுமிக்க ஓவியங்களை வரைய ஓவியர்களுக்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்..