மதுரை

அம்மா மினி கிளினிக் திட்டத்திற்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு – வி.வி.ராஜன்செல்லப்பா மகிழ்ச்சி

மதுரை

அம்மா மினி கிளினிக் திட்டம் பொதுமக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளதாக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா தெரிவித்தார்.

முதலமைச்சரின் உன்னத திட்டமான அம்மா மினி கிளினிக்கை திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள திருப்பரங்குன்றம் ஒன்றிய பகுதியில் உள்ள பாறைபத்தி, சாக்கிலிபட்டி ஆகிய பகுதிகளில் மதுரை கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வி.வி.ராஜன்செல்லப்பா திறந்து வைத்தார்.

பின்னர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா கொண்டுவந்த உன்னதத் திட்டமன அம்மா உணவகம் போல் இன்றைக்கு 2000 அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார்.
நமது திருப்பரங்குன்றம் தொகுதியில் மட்டும் 11 இடங்களில் அம்மா கிளினிக் செயல்பட உள்ளது. இந்த சாக்கிலிப்பட்டி கிராமத்தில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு செல்வது என்றால் இங்கிருந்து 5 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். ஆனால் இப்போது நிலைமை மாறி உங்கள் இருப்பிடத்திற்கு இந்த மருத்துவமனை வந்துள்ளது.

காலையில் நான்கு மணி நேரமும் மாலையில் நான்கு மணி நேரமும் இந்த மருத்துவமனை செயல்படும் இதில் சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் காய்ச்சல், சளி, குழந்தைகளுக்கான பொது சிகிச்சை ஆகியவற்றை அளிக்க உள்ளது.

இந்த தொகுதியில் சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் முதலமைச்சர் நிறைவேற்றி தந்துள்ளார். மேலும் இன்றைக்கு ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்களுக்கும் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் அரசாக அமைந்துள்ளது தமிழகம் தான் சுகாதாரத்துறையில் முதன்மையாக திகழ்ந்து வருகிறது. தற்போது இந்த அம்மா மினி கிளினிக் மக்களிடத்தில் மிகப் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

ஆகவே உங்களுக்காக உழைத்து வரும் இந்த அரசுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆசி பெற்ற வேட்பாளரை நீங்கள் வெற்றிபெற செய்ய வேண்டும் ஏனென்றால் இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சரவணன் இப்பகுதி மக்களுக்கு எந்தத் திட்டமும் செய்யவில்லை என்று உங்களுக்கு நன்றாக தெரியும்.

இவ்வாறு வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆசிப், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர்முருகன், மாவட்ட கழக துணை செயலாளர் முத்துக்குமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சந்திரன், மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் கருத்த கண்ணன், பகுதி கழக துணைச் செயலாளர் செல்வக்குமார், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.