தற்போதைய செய்திகள்

மதுரை மாவட்டத்திற்கு ரூ.4 கோடி பேரிடர் நிவாரண நிதி – முதலமைச்சர் வழங்கியதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

மதுரை

மதுரை மாவட்டத்திற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ரூ. 4 கோடிக்கு மேல் நிதியினை முதலமைச்சர் வழங்கி உள்ளார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் ஆதரவற்றவர்கள், முதியவர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மதுரை காந்தி மியூசியம் எதிரில் உள்ள பூங்கா முருகன் கோவில் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டவர்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற மகத்தான நடவடிக்கைகளை எடுத்து மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழக முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். தமிழகம் முழுவதும் இந்த முழு ஊரடங்கு உத்தரவினால் மக்களுக்கு 3,280 கோடி ரூபாய் அளவில் நிவாரண உதவிகளை வழங்கினார். சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகங்களில் மக்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார். தினந்தோறும் இந்த அம்மா உணவகம் மூலம் தமிழகத்தில் 8 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சியில் 12 இடங்களிலும் ,புறநகர் பகுதியான திருமங்கலம், மேலூர் மற்றும் உசிலம்பட்டி ஆகிய மூன்று நகராட்சிகளிலும் என ஆக மொத்தம் 15 அம்மா உணவகங்கள் மூலம் தினந்தோறும் 20 ,000 நபர்கள் பயன்பெற்று வருகின்றனர்
இந்தப் புனிதப் பணியில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க கழக நிர்வாகிகள் மக்களுக்கு விலையில்லாமல் உணவு வழங்க அதற்குரிய கட்டணத்தை வழங்கி வருகின்றன.ர் இப்படி மக்களின் பசியைப் போக்கி ஒரு அட்சய பாத்திரமாக அம்மா உணவகம் வழங்கி வருகிறது.

மதுரை மாவட்டத்தில் ஆதரவற்றோர், வீடு இல்லாதவர் 410 நபர்கள் கண்டறியப்பட்டு 23-ம் தேதி முதல் தற்போது வரை 11,89,000 ரூபாய் மதிப்பில் தினசரி மூன்று வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஹார்விபட்டி சமுதாயக்கூடம், பழங்காநத்தம் சமுதாயக்கூடம், காக்கை பாடியார் பள்ளி, பூங்கா முருகன் கோயில் ஆகிய இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இது போன்ற ஆதரவற்றோருக்காக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதியினை முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் 9 பேரூராட்சிகளில் 302 நபர்களுக்கு 3,82,600 ரூபாய் மதிப்பில் உணவு பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. ஏழுமலை பேரூராட்சியில் 40 ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கொரோனா நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள கொள்வதற்காகவும், ஏழை எளிய மக்களுக்கு உணவு அளிக்கவும், திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம் ஆகிய நான்கு கோட்டாட்சியர்களுக்கும், மதுரை வடக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, கிழக்கு, மேலூர், திருமங்கலம், கள்ளிக்குடி, வாடிப்பட்டி, திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி ஆகிய 11 வட்டாட்சியர்களுக்கும் 62,20,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநில பேரிடர் ஆணையத்தின் தலைவரான முதலமைச்சர் தலைமையில் 13 கூட்டங்கள் நடைபெற்றன. அதே போல் சட்டப்பேரவையில் முதன்முதலாக பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ.500 கோடியை முதலமைச்சர் முன்கூட்டியே ஒதுக்கினார். நமது மதுரை மாவட்டத்திற்கு இந்த கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் மதுரை மாவட்டத்திற்கு மூன்று கோடியே 15 லட்ச ரூபாயும், மாநகராட்சிக்கு ஒரு கோடி ரூபாய் என மொத்தம் மதுரை மாவட்டத்திற்கு 4 கோடியே 15 லட்சம் ரூபாயை முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

மக்களுக்கான சேவையில் இருந்து வரும் ஊடக நண்பர்களுக்கும் இந்த தொற்று வந்து விட்டது என்பதை அறிந்து மிகுந்த வேதனை அடைகின்றேன். அனைவரும் பூரண உடல் நலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்,தற்சமயம் பணியில் இருக்கும் ஊடக நண்பர்களும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

மருத்துவர்களின் அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு விழிப்புணர்வோடு நடந்து கொண்டால் இந்த பாதிப்பில் இருந்து அனைவரும் மீண்டு வர முடியும் என்பதே உண்மை. அதுவே அனைவரும் ராணுவக் கட்டுப்பாட்டோடு மக்கள் தாமாக முன்வந்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். அப்படி இருந்தால் தான் இந்த நோய் தொற்றிலிருந்து நாம் முழுவதுமாக நம்மை விடுவித்துக்கொள்ள முடியும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மேலும் மே 3ம் தேதிக்கு பிறகு ஏதேனும் ஊரடங்கு உத்தரவு தளர்வு ஏற்படுமா என்ற கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சூழ்நிலைக்கு ஏற்றவாறு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மக்களின் பாதுகாப்பு நலன் கருதி எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

தற்சமயம் கண்ணுக்குத் தெரியாத கொரோனாவை வீழ்த்தும் பணியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி செயல்பட்டு வருகிறார்,வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் பல கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளார். மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு மத்திய அரசின் நிதியை பெற்று தருவதில் முதலமைச்சர் முன்னோடியாக திகழ்கிறார். இது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு தான் இது தெரியவில்லை என்றார்.