தற்போதைய செய்திகள்

நியாய விலைக்கடைகளில் முறையாக பொருட்கள் கொடுக்கவில்லையென புகார் தெரிவித்தால் நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்

மதுரை

நியாய விலைக்கடைகளில் முறையாக பொருட்கள் கொடுக்கவில்லை என புகார் தெரிவித்தால் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணியாக மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவசமாக 24 வகையான மளிகைப்பொருட்கள் தொகுப்பினை ஆணையாளர் ச.விசாகன் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய் முன்னிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது : –

முதலமைச்சர் உத்தரவின்படி கொரோனா தடுப்பு பணிகள் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்து சமூகபரவல் இல்லாமல் தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அனைத்து துறைகளும் மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன.

முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அத்தியாவசிய தேவையான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் தங்குதடையின்றி அவரவர் வீட்டிலேயே கிடைப்பதற்கும், விலைவாசி ஏற்றம் இல்லாமல் சிறப்பான முறையில் பணிகளை மேற்கொள்ளும் அனைத்து அலுவலர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரை மாநகர், மேற்குத் தொகுதியில் உள்ள பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கும் பணி ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டது. தற்போது கணவனால் கைவிடப்பட்டோர், தினக்கூலிகள், ஏழை எளியோர், முதியோர், வலியவர்கள் ஆகியோர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியில் ஈடுபடும் மேற்குத் தொகுதியில் பணியாற்றும் 823 பணியாளர்களுக்கு அரிசி 5 கிலோ, துவரம் பருப்பு 500 கிராம், உளுந்தம் பருப்பு 500 கிராம், கடலை பருப்பு 250 கிராம்,

கடுகு 100 கிராம், வெந்தயம் 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், உப்பு 1 கிலோ, சோம்பு 50 கிராம், சீரகம் 50 கிராம், மஞ்சள் தூள் 50 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், மல்லி தூள் 100 கிராம், சாம்பார் பொடி 50 கிராம், பெருங்காயம் 20 கிராம், சுக்கு காபி 1 பாக்கெட், மிளகாய் வத்தல் 50 கிராம், பட்டை 20 கிராம், சன்பிளவர் ஆயில் 500 மி.லிட்டர்,

சோப்பு 1, ஏஒன் சலவை சோப்பு 1, குளியல் சோப்பு 1, டீதூள் பவுடர் 1 பாக்கெட் என 24 வகையான ரூ.670 மதிப்பிலான மளிகைப்பொருட்கள் வழங்கப்படுகிறது. கொரோனாவை ஒழிப்பதில் தூய்மைப் பணியாளர்களின் பங்கு அற்புதமானது, போற்றுதலுக்குரியது, பாராட்டத்தக்கது.

மேலும் மாநகராட்சியில் பணியாற்றும் சுமார் 5000 பணியாளர்களுக்கும் இந்த 24 வகையான மளிகைப்பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. முதலமைச்சர் நியாய விலைக்கடைகளில் மே மாதத்திற்கான பொருட்கள் வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் சமூக இடைவெளியினை கடைபிடிக்கும் வகையில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட உள்ளது. ஊரடங்கு நீடிப்பது குறித்து உயர்மட்ட குழு ஆலோசனை அடிப்படையில்தான் முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்வார்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் சமூக பரவலை தவிர்க்கும் வகையில் கிருமி நாசினிகள் நாள்தோறும் ஒவ்வொரு தெருவாக தெளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் முதலமைச்சரின் அறிவுரையின்படி தாங்களே தங்களை கட்டுப்படுத்தி வீட்டிலேயே இருக்க வேண்டும். நியாய விலைக்கடைகளில் முறையாக பொருட்கள் கொடுக்கவில்லை என புகார் தெரிவித்தால் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியாவிலேயே நியாய விலைக்கடைகளில் விலையில்லாமல் அரிசி கொடுப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி ஒருவருக்கு 5 கிலோ வீதம் குடும்ப உறுப்பினர்கள் எத்தனை நபர்களோ அதற்கு தகுந்தாற்போல் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்ததார்.

முன்னதாக தூய்மை பணியாளர்களின் பணியினை பாராட்டி அவர்களுக்கு பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து அமைச்சர் கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் ச.விசாகன், நகரப்பொறியாளர் அரசு, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன், பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஏ.ராஜா, உதவி நகர்நல அலுவலர் வினோத் ராஜா, உதவி ஆணையாளர்கள் பழனிச்சாமி, சேகர், உதவி செயற்பொறியாளர் ஆரோக்கியசேவியர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், சுகாதார அலுவலர் விஜயகுமார் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.