தற்போதைய செய்திகள்

அம்மா உணவகங்கள் மூலம் அனைவருக்கும் இலவச உணவு – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தகவல்

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சி, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல் ஆகிய நகராட்சிகளில் செயல்படும் அம்மா உணவகங்களின் மூலம் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருவதால் ஏழை, எளிய பொதுமக்கள் உணவிற்காக வெளில் செல்வதனை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும், மூன்று வேளைகளிலும் உணவு வழங்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவு வழங்கியதின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் செயல்படும் அம்மா உணவகங்களின் மூலம் உணவு வழங்கப்பட்டு வந்தன.

பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடவும், அவர்களின் உணவு தேவையினை பூர்த்தி செய்வதில் கழக தொண்டர்கள் இணைந்து பணியாற்றிட வேண்டும் என இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,
ஆகியோரின் ஆணைக்கிணங்க கழகத்தின் சார்பில் முழு செலவினத்தினையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்குரிய தொகை செலுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், நேற்று முதல் காலை, மதியம், இரவு உணவு என மூன்று வேளைக்கும் சேர்த்து திண்டுக்கல் மாநகராட்சி, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல் ஆகிய நகராட்சி உணவகங்கள் மூலம் மதியம் முட்டையுடன் சேர்த்து நாள் ஒன்றுக்கு 3300 நபர்களுக்கு ஏற்படும் ரூ.21300 வீதம் 3.5.2020 வரை உள்ள நாட்களுக்கான செலவினத்தை திண்டுக்கல் மாவட்ட கழகம் ஏற்றுக்கொள்ளும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து திண்டுக்கல் 14-வது வார்டு பகுதியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஏழை மக்கள் 1000 நபர்களுக்கு அரிசி, 7 வகையான காய்கறி அடங்கிய தொகுப்பினை கழகம் சார்பில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர்செந்தில்முருகன், மாவட்ட கழக செயலாளர் வி.மருதராஜ், மாவட்ட துணை கழக செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ ஒன்றிய கழக செயலாளர்கள் பாலசுப்பிரமணி, ஜெயசீலன், முத்துச்சாமி, பழனி நகர செயலாளர் முருகானந்தம், திண்டுக்கல் பகுதி செயலாளர்கள் ராஜ்மோகன், பிரேம்குமார், சேசு, சுப்பிரமணி, மோகன், ஆவின் பால்வள தலைவர் எ.டி.செல்லச்சாமி ஆகியோர் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.