தற்போதைய செய்திகள்

1 லட்சம் குடும்பங்களுக்கு உணவுப்பொருள் வழங்க ஏற்பாடு – வாகனங்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழியனுப்பி வைத்தார்

கரூர்

1 லட்சம் குடும்பங்களுக்கு உணவுக்கான பொருட்களை வழங்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி மக்களுக்கான உணவுப்பொருட்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் முன்னிலையில் பிரேம் மஹாலில் இருந்து வழியனுப்பி வைத்தார்.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் வகையில் முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகின்றது.

இந்நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது சொந்த செலவில் கரூர் மாவட்டத்தில் 1 லட்சம் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, 2 கிலோ கோதுமை, 1 கிலோ பருப்பு, அரை லிட்டர் சமையல் எண்ணெய், அரைக்கிலோ சர்க்கரை, 1கிலோ உப்பு, 100 கிராம் மஞ்சள் பொடி உள்ளிட்ட சுமார் 10 கிலோ எடையுள்ள பொருட்கள் வழங்கும் பணியினை 19.4.2020 அன்று துவக்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாகச்சென்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சார்பில் உணவுக்கான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. பல இடங்களில் அமைச்சர் நேரடியாக சென்று பொதுமக்களுக்கு உணவுக்கான பொருட்களை வழங்கி வருகின்றார்.

அந்த வகையில் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி மக்களுக்கு உணவுப்பொருட்கள் கொண்டு செல்லும் வகையில் பிரேம் மஹாலில் இருந்து சுமார் 35 வாகனங்களில் ஒரு வாகனத்திற்கு 150 பைகள் வீதம், மொத்தம் 5,250 பைகளில் உணவுக்கான பொருட்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழியனுப்பி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து மண்மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உணவுக்கான பொருட்களை அமைச்சர் நேரில் வழங்கினார். இதுவரை சுமார் 43,430 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகைப்பொருட்களுடன் கூடிய பைகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் இயக்குநர் எஸ்.கவிதா, கரூர் வருவாய் கோட்டாட்சியர் வ.சந்தியா, நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிக, கரூர் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் தங்கராஜ், கரூர் வட்டாட்சியர் அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.