தற்போதைய செய்திகள்

பாடப்புத்தகம் வழங்கும் பணியை 14-ம்தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

ஈரோடு

10ம்வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்குவதையும், 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மடிகணினியில் ஆன்லைன் கல்விக்கான பிரத்யேக மென்பொருள் பதிவிறக்கம் செய்வதையும் வருகிற 14ம்தேதி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார் என்று பள்ளிக்கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுக்காக கட்டப்பட்டுள்ள காவலர் உணவகம், பல்நோக்கு கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ, சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, கே.ஆர்.ராஜா கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வருகிற 17-ம்தேதி ஈரோடு வருவதையொட்டி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆய்வினை மேற்கொண்டனர்.

அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வருகிற 17ம்தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஈரோடு வருகை தந்து மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதியில் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் தொடக்க விழா, புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு விட்டு அரசுத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்குவதை வருகிற 14ம்தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார். அதேநாளில் இந்திய அளவில் முதன்முறையாக ஈ பாகஸ் நிறுவனத்தின் உதவியுடன் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அவர்களது மடிகணினியில் ஆன்லைன் கல்விக்கான பிரத்யேக மென்பொருள் பதிவிறக்கம் செய்யப்படுவதையும் தொடங்கி வைக்கிறார். மத்திய அரசு 30 சதவிகிதம் பாடங்களைக் குறைப்பது குறித்து கடும் விமர்சனம் எழுந்து வருவதால் 18பேர் கொண்ட கல்வியாளர்கள் குழுவினரின் பரிந்துரையின் பேரில் தமிழக முதல்வர் அதற்கான முடிவுகளை அறிவிப்பார்.

மாணவ, மாணவிகளுக்கு வீடு வீடாக பாடப்புத்தகங்கள் வழங்குவது குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். மனிதநேயம் கொண்டவர்கள் ஒத்துழைப்பு கிடைத்தால் வீடு வீடாக புத்தகங்கள் வழங்குவது சாத்தியப்படும். கல்வித் தொலைக்காட்சியில் மாணவ, மாணவிகளுக்கு பாடங்கள் வகுப்புகள் வாரியாக நடத்தப்படுவது கால அட்டவணைப்படி ஒளிபரப்பு செய்யப்படும்.

பள்ளிகள் திறப்பு குறித்து பேசுவதும் அதனைச் சிந்திப்பதற்கும் இது நேரமில்லை. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துவது, கல்விக் கட்டணங்கள் கட்டச் சொல்லி கட்டாயப்படுத்துவது போன்ற புகார்களைத் தெரிவிப்பதற்கு இரண்டு நாட்கள் பொறுத்திருந்தால் அதற்கான வரைமுறைகள் அறிவிக்கப்படும் அதற்குப்பிறகு புகார்களைத் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.