தற்போதைய செய்திகள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள் – அமைச்சர் கே.சி.வீரமணி நம்பிக்கை

வேலூர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கொனோரா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் படிப்படியாக குணமடைந்து அனைவரும் விரைவில் வீடு திருமபுவார்கள் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலையில் திருப்பத்தூர்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியுதவிக்கு தன்னுடைய பங்களிப்பாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை கொரோனா தடுப்பு நடவடிக்கை பணி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மங்கத்ராம்சர்மா மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.ப.சிவன்அருள் ஆகியோரிடம் ஒப்படைத்தார்.

தொடர்ந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சகோதரரின் பிள்ளைகள் தங்களுடைய சொந்த சேமிப்பு பணம் ரூ.50 ஆயிரம் நிதியை மாவட்ட ஆட்சித்தலைவர் ம.ப.சிவன்அருளிடமும், ரூ.50. ஆயிரம் நிதியை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பி.விஐயகுமாரிடமும் என மொத்தம் ரூ.1 லட்சத்தை ஒப்படைத்தார்கள்.

இந்த நிதியினை கொனோரா வைரஸ் நோய் தடுப்பு நிவாரண பொருட்கள் மருத்துவ உபகரணங்கள் வாங்கிட வழங்கினார்கள். இதனை தொடர்ந்து திருப்பத்தூர் ரெயின்போ டி.வி.சென்டர் சார்பாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொனோரா வைரஸ் சிகிச்சை தனிப்பிரிவை கண்காணித்திட ரூ.50 ஆயிரம் மதிப்புடைய எல்.ஈ.டி. டி.வியை இலவசமாக பயன்பாட்டிற்காக வழங்கினார்கள்.

தொடர்ந்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் 50 தூய்மை பணியாளர்கள் மற்றும் டேங்க் நீரேற்றும் பணியாளர்களுக்கு பாச்சல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சொந்த பணத்தை வழங்கிட முன்வந்தார். இந்த நிதியினை தலா.ரூ.1000 வீதம் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, கொரோனா தடுப்பு நடவடிக்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மங்கத்ராம்சர்மா ஆகியோர் 50 பணியாளர்களுக்கு வழங்கினர்.

பின்னர் அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் ஆணையின்படி கொரோனா வைரஸ் நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த தடுப்பு நடவடிக்கை பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர் ஒருங்கிணைந்த வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தொடர்ந்து ஆய்வு செய்து அரசின் அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வைரஸ் நோயின் தாக்கம் கட்டுக்குள் இருந்து வருகின்றது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வீடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளவர்களும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள்.

புதிய தொற்று உருவாகாமல் இருக்க தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகத்தால் தீவிரமாக செய்து வருகிறார்கள். மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கு தடை காலத்தில் மக்கள் சிரமங்களை பொருத்துக்கொண்டு அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும். அப்போது நோயின் தாக்கம் கட்டாயமாக குறையும் என்பதை அனைவரும் உணர்ந்து ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 23 அனைத்து அம்மா உணவகங்களிலும் நாள்தோறும் 3 வேளைகளிலும் ஏழை எளிய பொதுமக்கள் இலவசமாக உணவுகளை சாப்பிடலாம். இதற்கான முழு செலவையும் முதலமைச்சரின் அறிவுரையின்படி அமைச்சர் என்ற முறையில் நானும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு தலைவர்களும் நேரடியாக கண்காணித்து ஏற்றுக்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நேர்முக உதவியாளர் வில்சன்இராஐசேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவர் டி.டி.குமார், உதவி இயக்குநர் ஊராட்சிகள் அருண், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேம்குமார், சந்திரன், முன்னாள் ஊராட்சிக்குழு தலைவர் லீலாசுப்பிரமணி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.ரமேஷ், முன்னாள் பாச்சல் ஊராட்சி மன்ற தலைவர் அசோகன், சுப்பிரமணி, டி.டி.சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.