தற்போதைய செய்திகள்

ராசிபுரம் பகுதியில் பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி குஞ்சுகள் – அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா வழங்கினார்

நாமக்கல்:-

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள ஆண்டகளூர்கேட்டில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பயனாளிகளுக்கு கோழிகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நாட்டு இனக்கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாநில சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா, 50 பயனாளிகளுக்கு நாட்டு இனக்கோழி குஞ்சுகளை வழங்கினார்.

இதன்மூலம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 500 பேர் பயன் பெறுவார்கள். இதனைத் தொடர்ந்து, ஆண்டகலூர் கேட் பகுதியில் பேருந்து நிறுத்தம், புதிய அரசின் சொந்தக் கட்டடத்தில் நியாய விலைக் கட்டடம் அமைக்கவும் ஆய்வுகளை மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா தெரிவித்ததாவது:-

தமிழக அரசு பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கால்நடை பராமரிப்புத்துறை மூலம் நாட்டுக்கோழிக் குஞ்சுகளை வழங்கி வருகிறது. தற்போது உள்ள கொரோனா பாதிப்பு காலகட்டத்தில் இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் கிடைத்து அதன்மூலம் பெண்கள் தொடர்ந்து கால்நடைகளை வளர்த்து தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே திருச்செங்கோடு வருவாய்க் கோட்டத்திற்குட்பட்ட 6 ஊராட்சி ஒன்றியங்களிலும் பேரூராட்சி பகுதிகளிலும் நாட்டுக்கோழிகள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது கொரோனா பாதிப்பு தளர்வு அளிக்கப்பட்டதையடுத்து, நாமக்கல் வருவாய்க் கோட்டத்திற்குட்பட்ட 9 ஊராட்சி ஒன்றியங்களில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் பயனாளி ஒருவருக்கு 25 அசில் நாட்டு இனக் கோழி குஞ்சுகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 9,125 பேர் பயன்பெறுவார்கள். தமிழக அரசு இதற்கு ஒரு கோடியே 87 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து கோழிக் குஞ்சுகளை வழங்கி வருகிறது. தமிழக அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஏற்கனவே தமிழகத்திற்கு பல்வேறு விருதுகளை வழங்கி சிறப்பு செய்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டுத் தொண்டு நிறுவனம் தமிழக முதலமைச்சருக்கு உலக அளவில் பால் ஹரீஸ் ஃபெல்லோ என்ற விருதை வழங்கி சிறப்பு செய்துள்ளது. சுகாதாரம், தாய்-சேய் நலம், குடிநீர், சுற்றுப்புற சுகாதாரம், உலக சமாதானம் ஆகிய ஐந்து குறியீடுகளை சிறந்த முறையில் தமிழக அரசு செயல்படுத்தி வருவதால் இந்த விருதை தமிழக முதலமைச்சர் பெற்றுள்ளார். மாநில அரசு அனைத்து துறைகளிலும் முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் அனைவரும் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவிக்கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். முகக்கவசம் அனைவரும் அணிய வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி தொற்று பரவாமல் தடுக்க வேண்டும் என்றும் கழக மகளிர் அணி இணைச் செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட கழக அவைத்தலைவரும், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.சுந்தரம், வெண்ணந்தூர் ஒன்றிய கழக செயலாளர் எஸ்.பி.தாமோதரன், கால்நடை பராமரிப்பு துறையின் நாமக்கல் மண்டல இணை இயக்குனர் டாக்டர் வி.பி.பொன்னுவேல், உதவி இயக்குநர் டி.வேல்முருகன், ஆண்டகலூர்கேட் கோழி நோய் ஆராய்ச்சி நிலைய உதவி இயக்குனர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.