சிறப்பு செய்திகள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு முக்கியம் – முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப் பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள 12 குழு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்து பேசியதாவது: –

தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவருக்கும், இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள 12 ஒருங்கிணைப்புக் குழுவில் இடம் பெற்றிருக்கின்ற அனைத்து உயர் அதிகாரி களுக்கும் என்னுடைய முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் குழு அமைக்கப்பட்டதிலிருந்து பல்வேறு பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு குழுவும் தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்ற பணியை சிறப்பான முறையில் செயல்பட்டு வருவது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

இன்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதைப் பொறுத்தவரை, ஏற்கனவே உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்கின்றது, என்னென்ன பணிகள் நடைபெற்றிருக்கின்றன, மேலும் இப்பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்கு உங்களுடைய ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவிக்கலாம். ஏனென்றால், நீங்கள் களத்திலே இருக்கின்ற காரணத்தினாலே அங்கே மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை, சிரமங்களை துரிதமாக தீர்ப்பதற்கு இன்னும் அரசால் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்களுடைய மேலான ஆலோசனைகளை வழங்கலாம்.

இன்றைக்கு ஒவ்வொரு துறையாக அழைக்கும்போது துறை வாரியாக அந்தந்தத் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்கலாம். காவல்துறையைப் பொறுத்தவரைக்கும், அவர்களது பணி கடுமையான மற்றும் சவாலான பணி. இரவென்றும், பகலென்றும் பாராமல் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற துறை காவல்துறை. தற்போது கிட்டத்தட்ட ஒருமாதத்திற்கு மேலாகி விட்டது.

ஒரே நபர்களை வைத்துக் கொண்டிருந்தால் நிச்சயமாக பணிச்சுமை ஏற்பட்டு சிரமம் ஏற்படும். எனவே, சுழற்சி முறையில் காவலர்கள் பணியாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் அதேபோல, காவல்துறையைச் சார்ந்த 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலகுவான பணியைக் கொடுக்க வேண்டும்.

சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை போன்ற பெரிய மாநகராட்சிகளில் காய்கறி மார்கெட்டில் தான் பிரச்சினையே. எவ்வளவு தான் நாம் எடுத்துச் சொன்னாலும், மக்கள் அதை பின்பற்ற மறுக்கிறார்கள். இதை விளையாட்டுத்தனமாக நினைக்கின்றார்கள். இந்தநோயின் வலிமை, தீவிரம், தாக்கம் போன்றவைகளை புரிந்து கொள்வதில்லை. இன்றைக்கு வீட்டிலிருந்து எல்லோரும் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் நடைபெறுகின்ற சம்பவம், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொத்துக் கொத்தாக மக்கள் இறக்கக்கூடிய சூழ்நிலையை பார்க்கிறார்கள். அங்கிருக்கும் மக்களும் இதை முதலில் உணரவில்லை. பிறகு அங்கு அதிகமான உயிர் பலி ஏற்படுகின்ற காரணத்தினால், அரசு சொல்கின்ற வழிமுறைகளை பின்பற்றியதன் பலனாக இன்றைக்கு அங்கு இறப்பு குறைந்திருக்கிறது.

இத்தாலியிலும், ஸ்பெயினிலும் அந்தநோய் குறைக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது அங்கு ஊரடங்கு தளர்த்தப்படும் என்ற செய்தியையெல்லாம் ஊடகத்தின் மூலமாக நாம் பார்க்கின்றோம். நமக்கு ஆரம்பகாலக் கட்டம், இந்த ஆரம்பக்காலக் கட்டத்திலேயே இதற்கு தகுந்த நடவடிக்கையை எடுக்கின்ற பொழுது, பொதுமக்களும் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால் இந்த நோய்பரவலை எளிதாக தடுக்கலாம்.

இல்லாவிட்டால், உலகநாடுகள் முழுவதிலும் கட்டுப்படுத்தப்பட்டாலும் கூட, நம் பகுதியில் கட்டுப்படுத்த முடியாத ஒருசூழ்நிலை ஏற்பட்டு விடும். ஆகவே, இந்த நோயினுடைய வலிமையை அறிந்து மக்கள் அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். அதற்கு நமது காவல்துறையும், உள்ளாட்சித் துறையும் வாகனங்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்தி வீதி வீதியாக பிரச்சாரம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

சமூக இடைவெளி, மக்கள் அதிகமாக கூடுகின்ற பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்ப்பது, சுத்தமாக இருப்பது போன்றவற்றை கடைபிடித்த காரணத்தினால் சீனா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இன்றைக்கு ஊரடங்கு தளர்வு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நம்முடைய பகுதியில் அதை பின்பற்றாத காரணத்தினாலே இன்றைக்கு அந்த நோயினுடைய எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் மக்களுக்கு உணர்த்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.