தற்போதைய செய்திகள்

3500 ஏழை குடும்பங்களுக்கு நிவாரணம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்

திருப்பூர்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 3500க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் வெள்ளக்கோவில் ஒன்றியம் மேட்டுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மாந்த புரம் அய்யம்பாளையம் குமரன்டி சாவடி பாப்பம் பாளையம் மூலகவுண்டன் வலசு நடு பாளையம் முத்துமலையம் கவுண்டன் வலசு அனுமந்தபுரம் வரகாளி பாளையம் எடைகாட்டு வலசு குழலி பாளையம் ராசத்தாள் வலசு அமராவதி பாளையம் பழனி கவுண்டன் வலசு நால் ரோடு முத்துகவுண்டன் பாளையம் ஆகிய பகுதியில்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 3500க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு முன்னாள் அமைச்சர் துரைசாமி தலைமையில் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வெங்கடேச சுதர்சன் முன்னிலையில் தலா 10 கிலோ அரிசி, எண்ணெய், பருப்பு, காய்கறி வகைகள், மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. வாரியத் தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கழகத்தின் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக நிவாரணம் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த வேளையில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்டத்தில் வாழும் மக்களை நேரிடையாக சந்தித்து உணவிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறோம்.

இந்த கொடிய கொரோனா வைரஸ் கிருமி மக்களை இம்மி அளவிலும் நெருங்கிவிட கூடாதென்பதில் கழக அரசு விழிப்புடன் செயல்படுகிறது. இந்த நேரத்தில் மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்பதால் நாங்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று காய்கறிகள் மற்றும் அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்களை வழங்கி வருகிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கே இருக்கின்றனர் என்பது தெரியவில்லை.

ஆனால் இந்த கொரோனா வைரஸை நமது மாநிலத்தில் பரவ விடாமல் தடுத்து மக்களை காக்க அரசிற்கு எதிர்க்கட்சிகள் கரம் கொடுத்து உதவாமல் அரசை குறைகூறி வருகின்றனர். எதில் அரசியல் செய்ய வேண்டும் என்பதை திமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் தன்னை முன்னிலைபடுத்துவதற்காக அரசு மீது பல குறைகளை கூறுகிறார். அதற்கு இது சரியான நேரம் இல்லை.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.