சிறப்பு செய்திகள்

கொடுத்த வாக்குறுதிகளை காற்றிலே பறக்கவிடுவது தான் திராவிட மாடலா?எடப்பாடியார் கேள்வி

சென்னை

விடியா தி.மு.க. அரசை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதி அண்ணாமலை நகரில் உள்ள அம்மா திடலில் நேற்று காலை நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி எழுச்சி உரையாற்றியதாவது:-

அறிவுப்பூர்வமான கல்வி நம்முடைய மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அம்மா கொண்டு வந்த திட்டத்தை நாமும் தொடர்ந்து செயல்படுத்தினோம். இன்றைய ஆட்சியாளர்கள் அந்த ஏழைகளுக்கு, ஏழை மாணவர்களுக்கு கொடுக்கின்ற மடிக்கணினி திட்டத்தை கூட நிறுத்தி விட்டார்கள்.

மாணவர்களின் வீட்டில் விளக்கேற்றிய கட்சி கழகம். கழக அரசு. இதையும் சண்டாளர்கள் நிறுத்தி விட்டார்கள். வேதனையாக இருக்கின்றது.

நம்முடைய மாணவ செல்வங்கள் எதிர்கால இந்தியாவை, எதிர்கால தமிழகத்தை ஆளக்கூடியவர்கள். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு அறிவுப்பூர்வ கல்வியை அளிக்க வேண்டும் என்பதற்காக அம்மா கொண்டு வந்த அற்புதமானதிட்டத்தை நிறுத்தியது தான் இந்த விடியா திமுக அரசு. இவர்கள் பேசுகிறார்கள் திராவிட மாடல் என்று.

இந்த திட்டத்தை நிறுத்தியது தான் திராவிட மாடலா. நீட் தேர்வு குறித்து ஆட்சிக்கு வருதற்கு முன்பு 2021சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது ஸ்டாலின் திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்.

ஊர் ஊராக பிரச்சாரம் செய்யும்போது ஸ்டாலினும் குறிப்பிட்டார். அவரது மகன் உதயநிதியும் குறிப்பிட்டார். அவருடைய கட்சித் தலைவர்களும் ஊர், ஊராக சென்று பிரச்சாரம் செய்தார்கள்.

ஆட்சிக்கு வந்து 16 மாதம் ஆகி விட்டது. எங்கே நீட் தேர்வை ரத்து செய்தீர்கள். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நீட் தேர்வுக்கு நீங்கள் தயாராகுங்கள் என்று பேசிக்கொண்டிருக்கிறார்.

நீட் தேர்வை கொண்டு வந்தது 2010ம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு. அதில் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தது. 2010 டிசம்பர் 21ல் நீட் தேர்வை கொண்டு வந்தது திமுகவும், காங்கிரஸ் கட்சியும்.

அப்போது மத்தியில் சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தவர் காந்திசெல்வன். அந்த கால கட்டத்தில் தான் இந்த நீட் தேர்வை கொண்டு வருவதற்கு மத்திய அரசிதழிலில் வெளியிட்டது காங்கிரசும் திமுகவும். இதனை தடுத்து நிறுத்த அம்மா சட்டப்போராட்டம் நடத்தினார். அவரின் இறுதி மூச்சு வரை போராட்டம் நடத்தினார். அதற்குப்பிறகு நாமும் அதனைத்தொடர்ந்து செயல்படுத்தினோம்.

ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். இன்றைக்கும் நீட் தேர்வு தமிழகத்திலிருந்து நீக்க வேண்டும் என்பதுதான் கழகத்தின் நிலைபாடு. ஆனால் இதில் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். ஆட்சிக்கு வருதற்கு முன்பு ஒரு பேச்சு. மக்களை ஏமாற்றி வஞ்சித்து வாக்குகளை பெற்று, ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்த வாக்குறுதியை காற்றிலே பறக்கவிட்டு விட்டார். இதுதான் திராவிட மாடல்.

ஏழை மாணவர்கள் மருத்துவராக வேண்டும்.பல் மருத்துவராக வேண்டும். அதிகமான மாணவர்கள் அரசு பள்ளியில் படிக்கிறார்கள். அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் மற்ற மாணவர்களோடு போட்டியிட்டு, நீட் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த கால கட்டத்திலே அவர்கள் மருத்துவராக முடியவில்லை. பல் மருத்துவராக முடியவில்லை.

அப்போது நான் சிந்தித்துப் பார்த்தேன். நானும் அரசுப்பள்ளியில் படித்தவன். அந்த எண்ணம் எனக்கு தோன்றியது. எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்கவில்லை. பொதுமக்கள் கோரிக்கை வைக்கவில்லை. ஆனால் அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்களும் மருத்துவராக வேண்டும், பல் மருத்துவராக வேண்டும் அதற்கு என் சிந்தனையில் உதித்த அற்புதமான திட்டத்தை நான் செயல்படுத்த துவங்கினேன்.

7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்து அமல்படுத்தப்பட்டு, இன்றைக்கு கிட்டதட்ட 450 பேர் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலமாக மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளார்கள். 110 பேர் பல் மருத்துவராக தேர்வாகியுள்ளார்கள். அப்படி அவர்கள் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் தேர்வாகியிருந்தாலும் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத நிலை.

அதனை உணர்ந்து அரசே அந்த மருத்துவக்கல்வி கட்டணத்தை செலுத்தும் என்ற அறிவிப்பை அளித்து அந்த ஏழை எளிய மாணவர்கள் இன்றைக்கு மருத்துவ படிப்பு படிக்கிறார்கள்.

2016-17ல் 41 சதவீதம் அரசுப்பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் 3 லட்சத்து 80 ஆயிரம் பேரில் வெறும் 9 பேர் தான் நீட் தேர்வில் வெற்றி பெற்றார்கள். 9 பேர் எங்கே இப்போது 450 பேர் எங்கே. நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

9 பேர் இருந்த நிலையை மாற்றி, ஏழை எளிய மாணவர்களுக்கு அம்மா அரசு கொண்டு வந்த சட்டத்தின் மூலமாக இன்றைக்கு மருத்துவ சீட் கிடைத்து கட்டணம் இல்லாமல் மருத்துவ கல்வியை படிக்கிறார்கள். அப்படிப்பட்ட அரசு தான் அம்மாவின் அரசு.

இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.