தற்போதைய செய்திகள்

அரசுக்கு நற்பெயர் வந்து விட்டதேயென எதிர்க்கட்சியினர் அரசியல் செய்கின்றனர் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

மதுரை

தமிழகத்தில் இப்போது நடப்பது புனிதப்போர். அரசுக்கு நற்பெயர் வந்துவிட்டதேயென எதிர்க்கட்சியினர் அரசியல் செய்கின்றனர் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் சோழவந்தான், உசிலம்பட்டி, திருமங்கலம் தொகுதிகளில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும், தூய்மைப்பணியாளர்களுக்கு நிவாரண தொகுப்புகள் மற்றும் மூன்று வேளை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு
உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதியை சேர்ந்த 2,386 தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி, முக கவசம், கிருமி நாசினி, தலா ரூ.1000 ஆகியவற்றை வழங்கினர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது;-

உலகை அச்சுறுத்தும் கொரோனா மனிதகுலத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த சவால்களை முதலமைச்சர் மதிநுட்பத்துடன் எதிர்கொண்டு தனது நீண்ட நெடிய அனுபவத்தை கொண்டு கொரோனா பரவலை தடுக்க களப்பணி ஆற்றி வருகிறார்.கொரோனா தடுப்பு நடவடிக்கையை பொறுத்தவரை வளரும் நாடுகள் எல்லாம் வல்லரசு நாடுகளை பின்பற்றி வந்தன.

ஆனால் இன்றைக்கு இந்த தொற்று நோயை தடுக்க கையாண்டு வரும் தமிழக முதலமைச்சரின் செயல்திட்டங்களைவல்லரசு நாடுகளே பின்பற்றக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை தடுக்க கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த தொற்று நோயை ஒழித்து, மக்களைக் காக்கும் புனித போரில் முதலமைச்சருக்கு வலுசேர்க்கும் வகையில், தூய்மைப் பணியாளர்கள் ஆற்றிவரும் சேவை மகத்தானது. தூய்மைப்பணியாளர்கள் இறைவனுக்கு நிகரானவர்கள் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த தொற்று நோய் இருப்பதை கேள்விபட்டாலே, அந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தயங்கி நிற்கின்றனர்.

அதனால் தான் அங்கு அதிகமான பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. முதலமைச்சரின் சீரிய நடவடிக்கையால், தமிழகத்தில் இந்த நோயின் தாக்கம் குறைந்ததோடு, நோய் தாக்கத்தில் இருந்து அதிகம் பேர் மீண்டு வருகின்றனர். இதனை கூட பல்வேறு வல்லரசு நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

நோய் தாக்கத்திலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க இரவு ,பகல் பாராது, முதலமைச்சர் உழைத்து வருவதை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஆனால் அரசுக்கு நல்ல பெயர் வந்து விட்டதே என்ற சில எதிர்க்கட்சிகள் இதிலும் கூட அரசியல் செய்கின்றனர். அரசியல் செய்ய இது உகந்த நேரம் அல்ல, இது மக்களைக் காக்கும் புனித போர், இதை எதிர்க்கட்சிகள் நன்றாக புரிந்து கொண்டு அரசுக்கு நல் ஒத்துழைப்பு அளித்தால் மக்கள் அவர்களை, ஒரு மனிதராக மதிப்பார்கள் என்பதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேபோல் இந்த புனிதப் பணியில் ஈடுபட்டிருக்கும் தூய்மை பணியாளர்களான நீங்கள் ஆற்றி வரும் சேவையை, முதலமைச்சர் உன்னிப்பாக கவனித்து வருகிறார். அதனால் உங்களுக்கு அரசின் சார்பிலும், கழகத்தின் சார்பிலும், பல்வேறு நிவாரண உதவிகளை வழங்க வேண்டு மென்று எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆகவே உங்களுக்கு என்றைக்குமே அம்மாவின் அரசு உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.மாணிக்கம், ப.நீதிபதி, ஒன்றிய செயலாளர்கள் செல்லப்பாண்டி, ரவிச்சந்திரன், பிச்சைராஜன், ராஜா, நகர செயலாளர் பூமா ராஜா, பேரூர் செயலாளர்கள் கொரியர் கணேசன், பாப்புரெட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்