தமிழகம்

எல்லையில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் – மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு

சென்னை

எல்லையில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும். மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப கூடுதல் கவனத்துடன் பணி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

இப்பொழுது கோடை காலமாக இருக்கின்ற காரணத்தினாலே கிராமப்புறம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் மக்களுக்கு தடையில்லாமல் குடிதண்ணீர் கிடைக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கவனமாக கண்காணிக்க வேண்டும். இந்நோயை பொறுத்தவரைக்கும், மத்திய அரசால் சிவப்பு பகுதி, ஆரஞ்சு பகுதி, பச்சை பகுதி என்று மூன்றாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.

சிவப்பு பகுதி என்பது அதிகமாக மக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதி. ஆரஞ்சு பகுதி என்பது குறிப்பிட்ட அளவு தான் அந்த நோய் தொற்று உள்ள பகுதி. பச்சை பகுதி என்பது யாரும் நோயால் பாதிக்கப்படாத பகுதி. இதை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கவனமாக எடுத்துக் கொண்டு, எந்த மாவட்டத்தில் பச்சை பகுதி இருக்கின்றதோ, அந்தப் பகுதியில் படிப்படியாக தொழில் துவங்குவதற்கு அரசு உங்களுக்கு சரியான உத்தரவை வழங்கும். அதை பின்பற்றி, நீங்கள் அந்த பச்சை பகுதியிலே தொழில் துவங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம், அனைத்து தொழிற்சாலைகளுக்கும் அனுமதி வழங்கலாம்.

இப்பொழுது சிமெண்ட், சர்க்கரை ஆலைகள், ஜவ்வரிசி ஆலைகள், ஸ்டீல் தொழிற்சாலை, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு ஆகிய தொழிற்சாலைகள் துவங்குவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கின்றது. ஆகவே, சிமெண்ட், சர்க்கரை ஆலைகள், ஜவ்வரிசி ஆலைகள், ஸ்டீல் தொழிற்சாலை, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு ஆகிய தொழிற்சாலைகளுக்கு இப்பொழுது தடை கிடையாது, அதற்கெல்லாம் அனுமதி கொடுக்கலாம். ஆனால், தடை செய்யப்பட்ட பகுதிகளில் அனுமதி கொடுக்க வேண்டாம்.அனைத்து பகுதி மக்களும் அவர்கள் இடத்திலேயே காய்கறிகள், அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வழிவகை செய்ய வேண்டும்.

காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும். தேவையில்லாமல் அனாவசியமாக வெளியில் செல்கின்றவர்களை கட்டுப்படுத்த வேண்டும்.பிற மாநிலங்களிலிருந்து நம் மாநிலத்திற்கு வருகின்ற எல்லைகளை இன்றைக்கு கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஏன் என்றால் அது மிக மிக முக்கியம். நோய் தொற்றுள்ளவர்கள் யாராவது நம் மாநிலத்திலே நுழைந்துவிட்டால் எளிதாக நோய் பரவிவிடும். ஆகவே, நம்முடைய மாநில எல்லையில் காவல்துறை அதிகாரிகள் கவனமாக கண்காணித்து நம்முடைய எல்லைக்கு வருகின்றவர்களை முழுமையாக பரிசோதனை செய்து தான் அனுமதிக்கப்பட வேண்டும். தேவையான அனுமதி சீட்டு பெற்றிருந்தால் அவர்களை அனுமதிக்கலாம்.

அவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்ய வேண்டும். அங்கேயே ஒரு மருத்துவ குழு இருக்கும், அங்கே பரிசோதனை செய்து தான் அவர்களை மாநிலத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இ-பாஸ் கொடுக்கின்றீர்கள். அது முறையாக வழங்கப்பட வேண்டும்.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எல்லா மருத்துவமனைகளிலும் தேவையான அளவிற்கு மருத்துவ உபகரணங்கள் இருக்கின்றதா என்பதை கண்காணிக்க வேண்டும். இதையெல்லாம் நம்முடைய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சரியான முறையிலே பின்பற்றி வந்தாலும், மேலும் சிறப்பான முறையிலே அரசால் கொடுக்கப்பட்ட ஆலோசனைகளை பின்பற்றி இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்போடு இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கிறேன்.

ஆகவே, இன்றைக்கு சிவப்பு பகுதிகளை ஆரஞ்சு பகுதிகளாக மாற்ற வேண்டும். ஆரஞ்சு பகுதிகளை பச்சை பகுதிகளாக மாற்ற வேண்டும். ஆகவே, அப்படி படிப்படியாக மாற்றினால்தான் இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும். அப்படி இயல்பு நிலைக்கு வந்தால்தான், தொழிற்சாலை இயங்க முடியும், நாட்டு மக்கள் இயல்பாக தங்களுடைய பணிகளை மேற்கொள்ள முடியும். அதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கடுமையாக தங்களுடைய பணிகளை மேற்கொண்டு வருகிறீர்கள்.

இருந்தாலும் மேலும் இந்த நோய் பரவாமல் தடுத்தால் தான் இயல்பு நிலைக்கு வரக்கூடிய சூழ்நிலை இருக்கின்ற காரணத்தினாலே மேலும் கூடுதலாக கவனித்து அரசு சொல்கின்ற வழிமுறைகளை பின்பற்றி தாங்கள் பணி செய்ய வேண்டும் என்று அன்போடு இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.