தற்போதைய செய்திகள்

தொண்டர்களை திசை திருப்ப நாடகம்: சசிகலாவுக்கு கழகம் கடும் கண்டனம்-சென்னை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை,

கழக தொண்டர்களை திசை திருப்ப முயற்சிக்கும் சசிகலாவுக்கு கண்டனம் தெரிவித்து சென்னை புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கந்தன்சாவடியில் மாவட்ட கழக அவைத்தலைவர் மணப்பாக்கம் மு.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.

கழக நிர்வாகிகள் பெரும்பாக்கம் எ.ராஜசேகர், லியோ என்.சுந்தரம், டி.சி.கோவிந்தசாமி, கோவிலம்பாக்கம் சி.மணிமாறன், எம்.எம்.பகீம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.கந்தன் ஆலோசனை வழங்கி பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஏ.முஸ்தபா முன்மொழிய நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வருமாறு:-

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, இப்போது கழகம் இவ்வளவு வலுவும், பொலிவும், தொண்டர் பெரும்படையும், மக்கள் செல்வாக்கையும், பெற்றிருப்பதை பார்த்தும், அரசியல் முக்கியத்துவத்தை தேடிக்கொள்ள, கழக தொண்டர்களை திசை திருப்பும் முயற்சியில் ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும், அதை ஊர் அறிய தொலைகாட்சிகளில் ஒளிபரப்புவதுமாக வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வரும் செயலை கண்டிக்கிறோம்.

கொரோனா தொற்றால் இறக்கும் நபர்களுக்கு அவர்களுடைய இறப்பு சான்றிதழில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார்கள் என்று குறிப்பிடாமல் அலட்சியம் காட்டும் அரசை கண்டித்தும், ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மீண்டும் மின்வெட்டை அமல்படுத்தி வரும் தி.மு.க. அரசை வன்மையாக கண்டிப்பது என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத்தொடர்ந்து சென்னை புறநகர் மாவட்டத்தில் உயிரிழந்த கழகத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.