சிறப்பு செய்திகள்

பொய்யர்களின் குடும்ப ஆட்சிக்கு முடிவெழுதுவோம் – ஒருங்கிணைப்பாளர்கள் சூளுரை

சென்னை, டிச.6-

ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்மாவின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தமிழகத்தில் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றி நாடாளும் பொய்யர்களின் குடும்ப ஆட்சிக்கு முடிவெழுத உறுதியேற்கிறோம். இனி எப்போதும் வெற்றி தான் என்று உறுதிமொழி ஏற்றனர்.

தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர், கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அம்மா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. புரட்சித்தலைவி அம்மாவின் நினைவிடத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் லட்சக்கணக்கான கழகத்தினர் திரண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து அம்மாவின் நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழியை படிக்க அனைவரும் அந்த உறுதிமொழியை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் கழக துணை ஒருங்கிணைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக அமைப்பு செயலாளர்கள், கழகத்தின் மூத்த முன்னோடிகள் திரும்ப வாசித்து ஏற்றுக் கொண்டனர்.

நம் அம்மாவின் ஆட்சியிலே,
அழகான தமிழ்நாடு; வளமான தமிழ்நாடு.
கொலை இல்லை; கொள்ளை இல்லை.
மக்களின் மகிழ்ச்சிக்கோ அளவில்லை.
அதை மீண்டும் அமைப்பதற்கு; ஓய்வின்றி உழைப்பதற்கு
உறுதி ஏற்கிறோம். உறுதி ஏற்கிறோம்.
பொய்யான வாக்குறுதி பல தந்து, தமிழர்களை ஏமாற்றி
நாடாளும் பொய்யர்களின், குடும்பத்தின் ஆட்சிக்கு முடிவெழுத உறுதியேற்கிறோம் முடிவெழுத உறுதியேற்கிறோம்; முடிவெழுத உறுதியேற்கிறோம் முடிவெழுத உறுதியேற்கிறோம்.

என்பன உள்பட பல்வேறு உறுதிமொழிகளை கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாசிக்க அதை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி உள்பட கழகத்தின் மூத்த முன்னோடிகள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருமித்த குரலாக திரும்ப வாசித்து ஏற்றுக்கொண்டனர்.

அதன்பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைவரும் 2 நிமிடம் மவுனம் கடைபிடிக்கும்படி கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். அதனை தொடர்ந்து அனைவரும் 2 நிமிடம் மவுனம் அனுசரித்தனர்.

முன்னதாக அம்மாவின் நினைவிடத்திற்கு லட்சக்கணக்கில் தொண்டர்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மறைந்து 5 ஆண்டுகள் ஆனாலும் அம்மாவின் நினைவில் வாழும் தொண்டர்கள் அம்மாவின் நினைவிடத்தில் மலர்களை தூவியும், மலர் வளையங்களை வைத்தும் மரியாதை செலுத்தினர்.