விழுப்புரம்

சங்கராபுரம் அருகே கிருமிநாசினி தெளிக்கும் பணி – இரா.குமரகுரு எம்.எல்.ஏ ஆய்வு

விழுப்புரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கிருமிநாசினி தெளிக்கும் பணியை இரா.குமரகுரு எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த கிராமத்திற்குள் வெளிநபர்கள் செல்லாத வகையில் அனைத்து சாலைகளிலும் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு மருத்துவ குழுவினர், ஊராட்சித்துறை, வருவாய்துறை, காவல்துறையினர் முகாமிட்டு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருவதை உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான இரா.குமரகுரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் அனைத்து தெருக்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறதா? மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து வருகிறார்களா? என ஆய்வு செய்து அங்கிருந்த மருத்துவரிடம் சோழம்பட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த விபரங்களை கேட்டு அறிந்தார்.

இந்த ஆய்வின் போது தமிழ்நாடு சர்க்கரை ஆலை இணைய தலைவர் ராஜசேகர், ஒன்றிய செயலாளர் அரசு, வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார், வட்டாட்சியர் பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, நாராயணசாமி, கூட்டுறவு சங்க தலைவர்கள் ராஜேந்திரன், பாண்டியன், கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட்னர்.