தற்போதைய செய்திகள்

எல்லாமே அம்மாவின் ஆட்சியிலும், முதல்வரின் நல்லாட்சியிலும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது – எ.வ.வேலுவுக்கு, அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சவுக்கடி

திருவண்ணாமலை,

தி.மு.க. ஆட்சியில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு என்ன செய்தீர்கள். எல்லாமே அம்மாவின் ஆட்சியிலும், முதல்வரின் நல்லாட்சியிலும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று முன்னாள் தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சவுக்கடி கொடுத்துள்ளார்.

திருவண்ணாமலையில் சில தினங்களுக்கு முன்பு முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலு ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர் மாவட்டத்திற்கும் அவரது சொந்த தொகுதியிலும் என்ன செய்தார். கொரோனா ஊரடங்கு காலத்தில் என்ன செய்தார் உள்ளிட்ட கேள்விகளை கேட்டு பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு பதிலளிக்கும் வகையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் தமிழக முதல்வர் தலைமையிலான நல்லாட்சியில் பல சாதனைகள் செய்யப்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்கு காலத்தில் திருவண்ணமாலை மாவட்டத்தில் உள்ள 65709 மாற்றுத்திறனாளிகளுக்கு 6.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதில் 15737 பேருக்கு 1.57 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 1314 கோவில் பூசாரிகளுக்கு 26 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள 531 வியாபாரிகளுக்கு 10 லட்சம் ரூபாய் கொரோனா நிதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அரிசி அட்டைதாரர்கள் 73,4,486 பேருக்கு 73.44 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் முடிதிருத்துவோர் 3707 பயனாளிகளுக்கு நிவாரணத்தொகையாக 74 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்கள் 66200 பயனாளிகளுக்கு 13.13 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அமைப்பு சாரா ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 1349 பேருக்கு 26 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள தெரு வியாபாரிகள் 7228 பயனாளிகளுக்கு 1.44 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் எனது சொந்த செலவில் ஆரணியில் உள்ள தூய்மை பணியாளர்கள் 1000 பேருக்கும், இருளர்கள் 500 பேருக்கும், நரிக்குறவர்கள், கூடை பின்னுபவர்கள் 315 பேருக்கும், சலவை தொழிலாளர்கள், சவரத் தொழிலாளர்கள் சுமார் 1389 குடும்பங்கள், எழை எளியோர் 1500 குடும்பங்கள் என 5000 குடும்பங்களுக்கும் அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதிகளில் உள்ள அம்மா உணவகம் மூலம் ஜூன் 30ந்தேதி வரை தினமும் 18000 பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

காவல்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 5000 பேருக்கு முககவசங்கள் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது. ஆரணியில் உள்ள கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்ள் 450 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. புகைப்பட கலைஞர்கள், பத்திரிகை நிருபர்கள் உட்பட 1000 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. ஆரணி தொகுதி முழுவதும் உள்ள ஒரு லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி நிவாரணமாக வழங்கப்பட்டது.

சேவூரில் உள்ள 3500 குடும்பங்களுக்கு அரிசி சிப்பம் வழங்கப்பட்டது. ஆரணி தொகுதியில் உள்ள நெசவாளர்களுக்கு நிவாரணம் கேட்டு முதல்வரிடம் கோரிக்கை வைத்ததின் பேரில் பரிசீலனை செய்து ரூ. 2000 வழங்க அரசாணை வெளியிட்டார். ஆலய குருக்கள், பூசாரிகளுக்கு 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு தனிநபர் கடனாக 50 ஆயிரம் ரூபாய் வரை கடனாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஆரணி சட்டமன்ற தொகுதியில் ஆரணி வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டு 3 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. ஆரணி புதிய கல்வி மாவட்டம் உருவாக்கப்பட்டது. போக்குவரத்து அலுவலகத்தை வட்டார போக்கு வரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டது. மின்பகிர்மான வட்டம் அமைக்க சட்டமன்றத்தில் அறிவிப்பு, மேற்கு ஆரணி ஒன்றியத்திற்கு 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிட பணிகள் நடந்து வருகிறது. ஆரணி அரசு மருத்துவ மனையில் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. கல்பூண்டி – லாடபாடி உயர்மட்ட மேம்பாலம் 5.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது.

தெள்ளூர் புதிய தடுப்பணை 5.64 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு தமிழக முதல்வர் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். அம்மாபாளையம் கிராமத்தில் உள்ள கமண்டல நாக நதிகுறுக்கே அணைக்கட்டு புதியதாக கட்டப்பட்டது, கொளத்தூர் அணைக்கட்டு. காமக்கூர் அனைக்கட்டு, எஸ்.வி.நகரம், ஆகிய பகுதிகளில் அணைக்கட்டுகள் சீரமைப்பு பணிகள் செய்தது, இந்து சமய அறநிலையத்துறை மூலம் எஸ்வி.நகரம், காமக்கூர், தேவிகாபுரம், உள்ளிட்ட பகுதிகளில் புதியதாக தேர்செய்து ஆலயத்திற்கு வழங்கப்பட்டது.

ஆரணி கைலாய நாதர் ஆலயத்திற்கான புதிய தேர் செய்து அதற்காக சாலைகள் சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் தேர் வெள்ளோட்டத்திற்காக தயார் நிலையில் உள்ளது. ஆரணி நகராட்சி சார்பில் 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காந்தி காய்கறி மார்க்கெட் கட்டப்பட்டு திறப்பு விழா செய்து செயல்பட்டு வருகிறது. காமக்கூரில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ஆரணி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கலை அரங்கம் கட்டப்பட்டுள்ளது.

ஆரணி கோட்டை மைதானத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமேடை அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர் ஆரணி புத்திர காமேட்டீஸ்வார் கோவில் அருகில் 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக திருமணம் மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. அந்த பணி விரைவில் முடியும் தருவாயில் உள்ளது. ஒருங்கிணைந்த நகர்ப்புற சாலை அபிவிருத்தி திட்டத்தில் ஆரணி நகராட்சியில் 15 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. கண்ணமங்கலம் பேரூராட்சியில் 2 கோடில் ரூபாயில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கண்ணமங்கலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆரணி முக்கிய சாலையில் தடுப்பு சுவர் மற்றும் உயர் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆரணியில் உள்ள முக்கிய ஜங்ஷன் பாய்ண்டுகள் 5 இடங்களில் அமைத்து நீர்வீழ்ச்சி அமைக்கப்படவுள்ளது. சேவூர், இரும்பேடு, மாமண்டூர், சங்கீதவாடி, ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு புதிய கட்டடங்களகட்டப்பட்டுள்ளது. மேலும் சுற்றுசுவர் அமைத்தல். நுழைவு வாயில் அமைத்தல் பணிகள் நடைபெற்றுள்ளது.

ஆரணியில் உள்ள அம்மா உணவகம் மூலம் பொது ஊரடங்கு அறிவித்தது முதல் ஜூன் 30ம்தேதி வரை எனது சொந்த பணம் கொடுத்து பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கியுள்ளேன். ஆரணியில் தச்சூர், மேல்சீசமங்கலம், விண்ணமங்கலம், அரையாளம், திருமணி, லாடப்பாடி, ஆகாரம், முனுக்கப்பட்டு, மேல்புதூர், மருசூர், கொருகாத்தூர், ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் மூலம் 6 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆரணி மத்திய பகுதியில் உள்ள சூரிய குளம் சுமார் 6.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
தச்சூர் விண்ணமங்கலம் இடையே புதிய தடுப்பணை கட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆரணி பழங்காமூரில் புதிய தடுப்பணை கட்டப்படவுள்ளது. ஆரணியில் புதிய பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை கட்டப்படவுள்ளது. ஆரணியில் உள்ள பழைய ஆற்காடு சாலையில் சுமார் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக மேம்பாலம் கட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ஆரணி சம்புவராயநல்லூர் விருபாட்சிஸ்வரர் ஆலயம், 43 லட்சம் மதிப்பிலும், முள்ளிப்பட்டு ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் 70 லட்ச ரூபாய் மதிப்பிலும், துருவம் காசிவிஸ்வநாதர் ஆலயம் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலும், அத்திமலைப்பட்டு செல்லியம்மன் ஆலயம் 90 லட்சம் ரூபாய் மதிப்பிலும், அக்கூர் ரேணுகாம்பாள் ஆலயம் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலும், சின்னபுத்தூர் மாரியம்மன் ஆலயம் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலும், காட்டுகாநல்லூர் இராமநாதீஸ்வரர் ஆலயம் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலும், பூசிமலைக்குப்பம் விநாயகர் ஆலயம் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலும், ஆரணி அனுமந்தராயர் ஆலயம் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலும், ஆரணி கில்லா சீனிவாச பெருமாள் ஆலயம் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருப்பணிகள் செய்ய நிதி வழங்கப்பட்டுள்ளது., மேற்கண்ட எண்ணற்ற பணிகளை என்னை வெற்றிபெற வைத்த ஆரணி தொகுதிக்கும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கும் செய்யப்பட்டுள்ளது.

நான் எந்தவித ஆடம்பரமும், அராஜகமும் இன்றி பணிகள் செய்துள்ளேன். திமுகவினர் கடந்த 2006-2011 வரை ஆட்சியில் இருந்தபோது ஆரணிக்கும், மாவட்டத்திற்கும் என்ன செய்தார்கள். எல்லாமே அம்மாவின் ஆட்சியில் தமிழக முதல்வரின் நல்லாட்சியில் தான் நடைபெற்றது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.