தற்போதைய செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.- த.மா.கா. கூட்டணி தொடரும் – ஜி.கே.வாசன் பேட்டி

சேலம், டிச. 7-

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் த.மா.கா. கூட்டணி தொடரும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. கூறினார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மம்பாளையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் பிரச்சினைகளுக்காக கண்ணியமாக நடைபெற வேண்டிய நாடாளுமன்றம் எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தோடு நடைபெறுகிறது. இடையூறுகள் எதுவும் இல்லாமல் நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற வளர்ச்சி திட்டங்களை தி.மு.க. அரசு தடை செய்யக்கூடாது. அது தொடர வேண்டும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்ற முடியாது என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற வேண்டும்.

சித்திரை 1-ம் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும். அதுவே அனைத்து கட்சி தலைவர்களின் கோரிக்கையாகும். இக்கோரிக்கையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தில் பல்வேறு ரயில்வே திட்டங்கள் நிலுவையில் உள்ளன. அந்த திட்டங்கள் உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்.

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நல்ல சூழ்நிலை உள்ளது. அ.தி.மு.க. தலைமையில் த.மா.கா. கூட்டணி தொடரும். ஆத்தூரை மாவட்டமாக அறிவிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதை கனிவுடன் அரசு பரிசீலனை செய்து ஆத்தூரை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. கூறினார்.