தற்போதைய செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 46 அம்மா மினி கிளினிக் – அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்

காஞ்சிபுரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 46 அம்மா மினி கிளினிக் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியம் பெரும்பாக்கம் கிராமத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.ஜான்லூயிஸ் தலைமையில் அம்மா மினி கிளினிக் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் க.பாண்டியராஜன் பேசியதாவது:-

பொதுமக்கள் நலன் காக்கும் வகையில் அம்மாவின் வழியில் செயல்படும் கழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கிராமபுற மக்கள் அவசர கால மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 46 அம்மா மினி கிளினிக் துவங்க அரசால் அனுமதிக்கப்பட்டு, அதில் முதல் கட்டமாக 13 இடங்களில் இம்மாத இறுதிக்குள் அம்மா மினி கிளினிக் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக பெரும்பாக்கம், சரவம்பாக்கம் செங்காட்டூர், முதலியார்குப்பம், மணமை, வழுவதூர், பையனூர், கீரப்பாக்கம், காரணைப்புதுச்சேரி, முடிச்சூர். திருநீர்மலை, திரிசூலம் ஆகிய கிராமங்களிலும் செம்பாக்கம் நகராட்சியில் ஒன்று என 13 அம்மா மினி கிளினிக் துவங்கப்படுகிறது. மீதமுள்ள 33 அம்மா மினி கிளினிக்குகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.

பெரும்பாக்கம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 5,778 பொதுமக்களும் மற்றும் சரவம்பாக்கம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 5,172 பொது மக்களும் பயன்பெறுவர் அம்மா மினி கிளினிக்கில் ஒரு மருத்துவ அலுவலர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு மருத்துவபணியாளர் பணியிலிருந்து மக்களுக்கு மருத்துவப்பணி செய்வார்கள். அம்மா மினி கிளினிக் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் செயல்படும் சனிக்கிழமை மட்டும் விடுமுறை. அம்மா மினி கிளினிக்கில் அடிப்படை மருத்துவ சிகிச்சைகள் அனைத்தும் மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அடிப்படை மருத்துவ ஆய்வக பரிசோதனைகள், சர்க்கரை அளவு மோகுளோபின் அளவு சிறுநீரில் உப்பு சிறுநீரில் சர்க்கரை, கர்ப்பம் உறுதி செய்தல் போன்ற பரிசோதனைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு வாந்தி மற்றும் தொற்றா நோய்களுக்கான சிகிச்சைகள், புறநோயாளிகளுக்கான சிகிச்சை கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சைகள், வயது முதியோர்களுக்கான சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது, தொற்றாநோய் சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் சிறு காயங்களுக்கான மருந்துகளும் வழங்கப்படும்
அவசர மருத்துவ தேவைக்கு தமிழக அரசின் இந்த அம்மா மினி கிளினிக்கை அனுகி பயனடையுமாறு மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறன்

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் பேசினார்.