தமிழகம்

நகர்ப்புற சமுதாய நல மையத்தில் இலவச சிறுநீரக சுத்திகரிப்பு மையம் – சென்னை மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் மண்டலம்,ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இலவச சிறுநீரக சுத்திகரிப்பு மையத்தை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ் நேற்று துவக்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம், ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மையத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் டேங்கர் பவுண்டேசன் இணைந்து ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைத்துள்ள இரத்த சுத்திகரிப்பு நிலையத்தை ஆணையாளர் கோ.பிரகாஷ் நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

“முதலமைச்சர் மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு சிறுநீரக சுத்திகரிப்பு மையம் (Dialysis Centre) அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 5 லட்சம் மக்களுக்கு ஒரு நகர்ப்புற சமுதாய நல மையம் என மொத்தம் 16 நகர்ப்புற சமுதாய நல மையங்கள் உள்ளன. இந்தச் சமுதாய நல மையங்களில் 100 படுக்கை வசதிகளுடன் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சை மற்றும் ஒருசில சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோன்று 50,000 மக்கள் தொகைக்கு ஒரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் என 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி, டேங்கர் பவுண்டேஷன் நிறுவனத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு இலவசமாக இரத்த சுத்திகரிப்பு செய்யும் வகையில் 5 இடங்களில் இரத்த சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரத்த சுத்திகரிப்பு நிலையங்களில் இதுவரை 35,610 நபர்கள் இலவசமாக சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். ‘தொடர்ந்து இன்று 6-வது இடமாக ஈஞ்சம்பாக்கத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய ரத்த சுத்திகரிப்பு நிலையம் 10 படுக்கை வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ஒரு நாளைக்கு 20 நபர்களுக்கு ரத்த சுத்திகரிப்பு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரத்த சுத்திகரிப்பு நிலையத்தில் பொதுமக்களுக்கு சிகிச்சையானது முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில், இணை ஆணையாளர் (சுகாதாரம்) பி.மதுசுதன் ரெட்டி, நகர மருத்துவ அலுவலர் டாக்டர் ஹேமலதா, தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி பவுண்டேஷன் அலுவலர் லதா குமாரசாமி, தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி பவுண்டேஷன் உறுப்பினர்கள் டாக்டர் ஜார்ஜ் ஆபிரகாம், டாக்டர் வி.சுமந்திரன், எஸ்.கீதா, உமா சங்கர், பொதுசுகாதாரம், மருத்துவ சேவைகள் துறை அலுவலர்கள் மற்றும் ரோட்டரி கிளப் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
\B