சிறப்பு செய்திகள்

ஈரானில் சிக்கி தவிக்கும் 40 மீனவர்களை மீட்க நடவடிக்கை – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் கடிதம்

சென்னை

ஈரானில் சிக்கி தவிக்கும் 40 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எழுதியுள்ள கடிதம்.

ஈரானில் தவித்து வரும் தமிழக மீனவர்களை மீட்க கோரி கடந்த 19.5.2020 அன்று எழுதிய கடிதத்தை தங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். அதன்படி, ஐ.என்.எஸ். ஜலஷ்வா கப்பல் மூலம் தமிழக மீனவர்கள் 681 பேர் கடந்த ஜூலை 1-ந்தேதி பாதுகாப்பாக தமிழகம் திரும்பினர். அதற்காக தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், கப்பலில் இடம் இல்லாத காரணத்தால் இன்னும் தமிழக மீனவர்கள் 40 பேர், ஈரானிலேயே தவித்து வருகின்றனர். எனவே, அந்த மீனவர்களை சிறப்பு விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.