கழக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த எவ்வித தடையும் இல்லை-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

சேலம்,
கழக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த எவ்வித தடையும் இல்லை. நீதிமன்ற உத்தரவை சரிவர தெரிவிக்காமல் ஊடகங்களும், பத்திரிகைகளும் தவறான செய்தி வெளியிடுவது வேதனை அளிக்கிறது என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார்.
கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமியை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் அ.ம.மு.க.வை சேர்ந்த தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் எஸ்.அய்யாத்துரை பாண்டியன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து தங்களை கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.
பின்னர் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அனைவருக்கும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள். டாக்டர்.எஸ்.அய்யாத்துரை பாண்டியன் தலைமையில் சுமார் பத்தாயிரம் பேர் கழகத்தில் இணைவதற்கு இன்றைய தினம் முன்னோடியாக அவருடைய தலைமையில் முக்கிய நிர்வாகிகள் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி :- பொதுச்செயலாளர் தேர்தலில் தொடர்ந்து பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறது. தேர்தல் எப்பொழுது நடக்கும்?
பதில் :- என்ன பிரச்சினை நடக்கிறது?
கேள்வி:- உச்சநீதிமன்றம் உத்தரவு கொடுத்துள்ளார்களே?
பதில் :- உத்தரவு ஏதும் கொடுக்கவில்லையே, ஊடக நண்பர்களும், பத்திரிகை நண்பர்களும் தவறான செய்திகளை வெளியிடுகிறீர்கள். உண்மையிலேயே வருத்தமும் வேதனையும் அளிக்கிறது.
சில பேர் மேல்முறையீடு செய்தார்கள், யார் மேல்முறையீடு செய்தார்கள் என்று உங்களுக்கு தெரியும். உச்சநீதிமன்றத்தில் வருகின்ற பொழுது அதற்கு தடையாணை கேட்கிறார்கள். அப்பொழுது எங்களுடைய வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்ற நீதிபதியே தெரிவித்திருக்கிறார். 95 சதவீத பொதுக்குழு உறுப்பினர் நம்மிடத்தில் இருக்கின்றார்கள்.
இடைக்கால பொதுச்செயலாளராக உங்களுடைய அணியை சேர்ந்தவர் பொறுப்பு வகித்து கட்சியை இயக்கி நடத்திக் கொண்டிருக்கிறார். அப்பொழுதுதான் நம்முடைய வழக்கறிஞர் பொதுச்செயலாளர் அறிவிப்பு வெளியிடப்படவில்லை,
ஒரு தவறான தகவல் தந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னதற்கு, நீதிஅரசர் இந்த விசாரணை முடிகின்ற வரை நீங்கள் பொதுக்குழுவை கூட்டக்கூடாது அதற்கு உத்தரவாதம் கேட்டார்கள். உத்தரவாதம் கொடுத்து உள்ளோம். தடையாணை யாரும் கொடுக்கவில்லை. நாங்கள் பொதுச்செயலாளர் அறிவிப்பு வெளியிடவே இல்லை.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.