தமிழகம்

ஏழை, எளிய மக்களுக்கும் – உழைக்கும் மக்களுக்கும் நல்ல சிகிச்சை அளிப்பதே அம்மா அரசின் லட்சியம் : முதலமைச்சர் பேச்சு

சென்னை

ஏழை, எளிய மக்களுக்கும் – உழைக்கும் மக்களுக்கும் நல்ல சிகிச்சை அளிப்பதே அம்மா அரசின் லட்சியம் என்று

சேலத்தில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சேலம் மாவட்டம், நங்கவள்ளி வட்டாரம் பெரியசோரகையில் முதலமைச்சரின் மினி கிளினிக்கை திறந்து வைத்து பேசியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம், நங்கவள்ளி வட்டாரம், பெரியசோரகையில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து பேசியதாவது.

அம்மாவின் அரசு, கிராமங்களிலிருந்து நகரம் வரை ஏழை, எளிய மக்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளில், மக்களுக்குச் சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்க முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு, தமிழகம் முழுவதும் 2,000 முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்திலும் நான் பல்வேறு பகுதிகளில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்த பின், இன்று ( நேற்று) என்னுடைய எடப்பாடி சட்டமன்றத் தொகுதி, பெரியசோரகையில் திறந்து வைத்துள்ளேன்.

கிராமத்தில் வாழ்கின்ற மக்களுக்காக அந்தந்தப் பகுதிகளிலேயே, முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் துவங்குகின்றபோது, அவர்களுக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் சிறிய நோய்கள் ஏற்பட்டால் உடனடியாக அம்மா மினி கிளினிக்கை நாடி தங்களுடைய நோயை குணப்படுத்திக் கொள்ளலாம். இங்கே ஒரு எம்.பி.பி.எஸ். மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர், ஊரகப் பகுதிகளில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், நகரப் பகுதிகளில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பார்கள்.

இங்கு சர்க்கரை நோய், காய்ச்சல், தலைவலி என கிராமப்புறங்களில் அதிகமாக பாதிக்கப்படக்கூடிய சிறிய நோய்களுக்குத் தேவையான மருந்துகள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளன. தங்களது உடம்பில் என்ன நோய் இருக்கிறதென்றுகூட தெரியாமல் இரவு பகல் பாராமல் உழைக்கின்ற பாமர மக்கள் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கில் சிகிச்சை பெற வரும்போது, அவர்களுக்கு கடுமையான நோய் ஏதேனும் தாக்கியிருந்தாலோ அல்லது அறுவை சிகிச்சை செய்து குணமடையச் செய்ய வேண்டிய நிலையிலிருந்தாலோ, மினி கிளினிக் மருத்துவரே, அவர்களை மேல் சிகிச்சைக்காக சேலம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

அம்மா அவர்கள் இருந்தபோதும், அம்மா அவர்கள் மறைவிற்குப் பிறகு அம்மாவின் அரசும், தமிழ்நாடு முழுவதும் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களையும் 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களையும் அதிகளவில் திறந்திருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும், கிராமங்கள் சூழ்ந்த புறநகர்ப் பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு, உழைக்கின்ற மக்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்க வேண்டுமென்பதற்காக எங்களுடைய அரசு தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என்ற செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான நல்ல சாலை வசதி, நல்ல குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, கழிவு நீர் வெளியேற்றம் மற்றும் அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றை எங்களுடைய அரசு சிந்தாமல், சிதறாமல் மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. எடப்பாடி தொகுதியில் நங்கவள்ளி, எடப்பாடி, கொங்கணாபுரம் ஒன்றியங்கள், எடப்பாடி நகராட்சி, நங்கவள்ளி, வனவாசி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி பேரூராட்சிகள் என அனைத்துப் பகுதிகளிலும் மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் மக்கள் வைத்த கோரிக்கைகளை அம்மாவின் அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.