தற்போதைய செய்திகள்

தலைமை எடுக்கும் முடிவிற்கு அனைவரும் கட்டுப்படுவோம்-கடலூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் எம்சி.சம்பத் உறுதி

கடலூர்

சசிகலாவின் எண்ணங்களை தூள் தூளாக்குவதோடு தலைமை எடுக்கும் முடிவிற்கு அனைவரும் கட்டுப்படுவோம் என்று கடலூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் எம்.சி.சம்பத் உறுதி அளித்துள்ளார்.

கடலூர் மத்திய மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாதிரிக்குப்பத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் என்.முத்துலிங்கம் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் கடலூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் கலந்து கொண்டு கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

சிறப்பான எதிர்க்கட்சியாக இயங்கிக் கொண்டு வரும் வேளையில் கழகத்தில் குழப்ப நிலையை உருவாக்க ஒரு சிலர் முயன்று கொண்டு இருக்கிறார்கள். அவர்களை நாம் புறந்தள்ள வேண்டும். அவர்களை நாம் தோற்க செய்ய வேண்டும். கழகம் மிகுந்த வலிவோடும் பொலிவோடும் உள்ளது. கழகத்தை ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கட்டுக்கோப்பாக வழிநடத்தி வருகிறார்கள்.

பலமான எதிர்க்கட்சியான கழகத்தை அபகரிக்க சிலர் முயற்சி செய்கின்றனர், அவர்களின் எண்ணம் என்றும் நிறைவேறாது. கழகத்தை அபகரிக்க முயற்சி செய்பவர்களின் எண்ணங்களை தூள் தூளாக்கி தலைமை எடுக்கும் முடிவிற்கு நாம் அனைவரும் கட்டுப்பட வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கொரோனாவை கையாளும் விதம் தவறானது. நாம் கையாண்டதற்கும் அவர்கள் கையாண்ட விதத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. உயிர்பலி இல்லாமல் நாம் கொரோனாவை கையாண்டோம். தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உயிர் பலிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

கொரோனா காலத்தில் கடலூர் மாவட்டத்திற்கு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடியார் ஓடோடி வந்து ஆய்வு செய்தார். இந்த அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து பல்வேறு கெட்ட பெயர்களையே வாங்கி உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத திராணியற்ற அரசாக இந்த அரசு உள்ளது.

இவவாறு முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்த சசிகலா இப்போது கழகம் வலிவும், பொலிவும், தொண்டர்கள் பெரும் படையும், மக்கள் செல்வாக்கும் பெற்று இருப்பதை பார்த்து அரசியலில் இறங்கப்போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும் அதை ஊரறிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதுமான வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி மகத்தான இருபெரும் தலைவர்கள் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஒப்பற்ற தியாகத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றிருக்கும் கழகத்தை அபகரிக்க முயற்சி செய்வதை கண்டிக்கிறோம்.

கொரோனா காலத்தில் தடுப்பூசி போடுவதற்கு வரும் மக்களை அலைக்கழிக்கும் திமுக அரசை கண்டிக்கிறோம். உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற அறிவுரைப்படி நோய் தொற்றால் இறந்தவர்கள் இறப்பு சான்றிதழில் உண்மையான காரணத்தை குறிப்பிட வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.