சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி கே.பழனிசாமி போட்டியின்றி ஏகமனதாக தேர்வு – தமிழகம் முழுவதும் தொண்டர்கள் உற்சாகம்

சென்னை,

கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி கே.பழனிசாமி ஆகிய இருவரும் இணைந்தே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனை கழக தேர்தல் ஆணையாளரும், கழக அமைப்பு செயலாளருமான சி.பொன்னையன், கழக தேர்தல் ஆணையாளரும், கழக தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் தலைமை கழக அலுவலகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று மாலை அறிவித்தனர்.

இது குறித்து தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிற்கான தேர்தல் அறிவிப்பு 1.12.2021 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி வேட்பு மனுக்கள் 3.12.2021, 4.12.2021 ஆகிய தேதிகளில் தலைமை கழகத்தில் பெறப்பட்டன.

அதில் ஓ.பன்னீர்செல்வம் கழக ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிற்கும், எடப்பாடி கே.பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிற்கும் கடந்த 4.12.2021 அன்று இருவரும் இணைந்தே வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

கழக ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிற்கு ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிற்கு எடப்பாடி கே.பழனிசாமி ஆகிய இருவரும் போட்டியிட வேண்டி தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் வேட்பு மனுக்களை அளித்துள்னர். இந்த வேட்பு மனுக்கள் 5.12.2021 அன்று கழக சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு முறையாக பரிசீலனை செய்யப்பட்டன.

ஓ.பன்னீர்செல்வம் கழக ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிற்கும், எடப்பாடி கே.பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிற்கும் போட்டியிட வேண்டி ஒரே ஒரு மனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாலும், அவர்களுடைய மனு கழக சட்ட திட்ட விதி 20 (அ): பிரிவு-2 ன்படி சரியாக உள்ளதாலும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகிய இருவரும் கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிற்கு ஏகமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்று அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்ட கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தலைமை கழக வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது திருவுருவ சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் இருவரும் சென்னை மெரினா கடற்கரைக்கு சென்று அங்கு அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வின்போது கழக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

கழக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட அறிவிப்பு வெளியானதும் தலைமை கழகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை முன்பு திரண்டிருந்த கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். மேலும் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இது தவிர தமிழகம் முழுவதும் கழக உடன்பிறப்புகள் பட்டாசு வெடித்தும், ஆடி பாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.