இந்தியா சிறப்பு செய்திகள் மற்றவை

லாக் டவுனை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி:-

நாடு முழுவதும் லாக்டவுனை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கொண்டு வரப்பட்ட லாக் டவுனை நீக்குவது, பொருளாதார நடவடிக்கைகளை படிப்படியாகத் தொடங்குவது குறித்து மாநில முதல்வர்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஊரடங்கு தொடர்பாகவும் மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஏற்கனவே கடந்த மார்ச் 20-ம் தேதியும் ஏப்ரல் 2 மற்றும் 11-ம் மற்றும் 27-ம்தேதிகளில் ஆலோசனை நடத்தி முதல்வர்களின் கருத்துகளை கேட்டறிந்தார். கடைசியாக நடந்த கூட்டத்திலும் மாநில முதல்வர்கள் 9 பேரில் 5 பேர் லாக்டவுனை நீட்டிக்க வலியுறுத்தினர். இதையடுத்து மூன்றாவது கட்டமாக மே 3-ம் தேதி முதல் 17ம்தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டது

இந்த ஆலோசனையில் நாட்டில் 3-வது கட்டமாக கொண்டு வந்துள்ள லாக்டவுன் நீட்டிக்கப் படுதலுக்கான வாய்ப்பு, பொருளாதார நடவடிக்கைகளை தொடங்குதல், விதிகளைத் தளர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. இ்ந்த கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என தெரிகிறது.