தற்போதைய செய்திகள்

திருமங்கலம் அருகே 25 ஆயிரம் ஏக்கரில் நவதானிய பயிர்கள் சேதம்-ஆர்.பி.உதயகுமார் ஆய்வு

மதுரை

திருமங்கலம் அருகே பேரையூரில் 25ஆயிரம் ஏக்கரில் நவதானிய பயிர்கள் காட்டுப்பன்றிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்ததும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருமங்கலம் அடுத்த பேரையூர் பகுதிகளில், கடந்த ஆடி மாதம் பெய்த மழையினால் 25 ஆயிரம் ஏக்கரில் மானாவரி பயிரான மக்காச்சோளம், பாசிப்பயிறு, உளுந்து, பருத்தி உள்ளிட்ட நவதானிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன.

தொடர்ந்து பெய்த மழையினால் இந்த பயிர்கள் தற்போது நன்றாக வளர்ந்துள்ளது. மேலும் மக்காச்சோள கதிர்களாக நன்கு வளர்ந்து பருவத்திற்கு வந்துள்ளது.

இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள கண்மாய்களில் குடியிருக்கும் காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக அருகில் உள்ள விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருக்கும், மக்காச்சோள பயிர்களை அடியோடு உடைத்து சேதப்படுத்தி அழித்து வருகிறது.

தமிழக அரசின் மெத்தனப்போக்கினால் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆய்வு செய்யாத நிலையில், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .

மேலும் இதுகுறித்து உசிலம்பட்டி கோட்டாட்சியரிடம் தொலைபேசியில் தகவல் கூறி, பாதிக்கப்பட்ட பயிர்களை உடனடியாக கணக்கீடு செய்து அரசுக்கு அனுப்பி விவசாயிகளுக்கு போதிய அளவில் நிவாரணம் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.