தற்போதைய செய்திகள்

அடக்குமுறையை கண்டு அஞ்சமாட்டோம் -எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

கோவை

எதற்கெடுத்தாலும் வழக்கு போட முயற்சிக்கும் தி.மு.க. அரசின் அடக்குமுறையை கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை இதயதெய்வம் மாளிகையில் கழக அமைப்பு செயலாளரும், புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. தலைமையில்
கோவை புறநகர் தெற்கு, வடக்கு மற்றும் மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க.வுக்கு எதிராக 9-ந்தேதி நடைபெற உள்ள கண்டன போராட்டத்தில் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். கடந்த 5 மாத கால தி.மு.க. ஆட்சியில் சொன்னதை ஏதாவது செய்தார்களா? அரசு அதிகாரிகள் ஆளும் தி.மு.க.வினரால் மிரட்டப்படுகிறார்கள். காவல்துறையை கழக ஆட்சியில் ஏதாவது தொந்தரவு செய்தோமா?
ஆனால் எதற்கெடுத்தாலும் எங்கள் மீது வழக்கு போட நினைக்கிறார்கள்.

எங்கள்‌ நிர்வாகிகளை மிரட்டுவதை நிறுத்தி கொள்ளுங்கள். நாங்கள் வழக்குகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் பயபடமாட்டோம். கழகத்தினருக்கு ஒரு‌ பிரச்சினை என்றால் நாங்கள் உள்ளோம். யாரும் பயப்பட வேண்டாம்.

கடந்த கழக ஆட்சிக் காலத்தில் மழையின்போதும், புயலின்போதும் சுழன்று பணியாற்றியதால் சென்னையில் வெள்ள பாதிப்பு குறைவாக இருந்தது, தற்போதைய தி.மு.க. அரசு 6 மாதமாக விளம்பரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. மக்களுக்கான பணிகளில் கவனம் செலுத்தவில்லை.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் எந்த பிரச்சினை நடந்தாலும் எதற்கெடுத்தாலும் ஊழல் என்று முதலமைச்சர் சொல்கிறார். 500-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்த தி.மு.க. அரசு இதுவரை அதை செயல்படுத்தவில்லை. வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவையை பொறுத்தவரை அனைத்து பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளையும் கழகம் கைப்பற்றும்.

ஊடகங்கள் தற்பொழுது நடக்கும் அவலங்களை சுட்டிக்காட்ட தயங்குகின்றன. கழக ஆட்சியில் ஊடகங்களுக்கு எத்தனையோ உதவி செய்யப்பட்டது. ஆனால் தி.மு.க.வுகஙகு எதிரான செய்திகளை ஒளிபரப்ப தற்போது தயக்கம் காட்டுகின்றனர்.

பயப்படுகின்றனர். ஆர்ப்பாட்டம் என்றாலே கோவையில் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம் மிக பெரிய வரலாறு. அந்த ஆர்ப்பாட்டம்தான் அராஜக தி.மு.க. ஆட்சியை மாற்ற அடிகோலிய‌ ஆர்ப்பாட்டம். ஆகவே 9- ந் தேதி ஆர்ப்பாட்டத்தில் லட்சம் பேரை திரட்டும் திறமை கழகத்திற்கு உண்டு.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ.பேசினார்.