சிறப்பு செய்திகள் தமிழகம்

சட்ட- திட்ட விதிப்படி கழக அமைப்பு தேர்தல் -ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

சென்னை

சட்ட, திட்ட விதிகளின் படி கழக அமைப்பு தேர்தல் நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

கேள்வி:- நீதிமன்றத்தில் வழக்கு வருகிறது. இதனை எப்படி அ.தி.மு.க. சட்டரீதியாக எதிர்கொள்ள இருக்கிறது?

பதில்:- கழக சட்ட திட்ட விதிகளின்படி தான் கழகத்தின் அமைப்பு தேர்தல் முறையாக நடைபெற ஆரம்பித்துள்ளது. முதற்கட்டமாக கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் கழக சட்ட விதிப்படியும், தர்மத்தின்படியும் நடந்து முடிந்துள்ளது.

தொடர்ந்து கழக அமைப்பு ரீதியான தேர்தல் முழுவதும் நடைபெறும். ஏற்கனவே தலைமை கழகத்தின் மூலமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உறுப்பினர் கார்டுகளை பெற்று சென்றவர்கள் உரியவர்களிடம் அதை சேர்க்கும்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கேள்வி:- நீதிமன்ற உத்தரவு ஏதாவது வந்தால் எந்த மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்வீர்கள்?

பதில்:- பொதுவாகவே நீதிமன்றத்தின் ஆணையை, தீர்ப்பை மதிப்பவன் நான்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.