மதுரை

மதுரை தெற்கு தொகுதியில் நடமாடும் காய்ச்சல் பரிசோதனை முகாம் – எஸ்.எஸ்.சரவணன் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு

மதுரை,

முதலமைச்சர் ஆணைக்கிணங்க மதுரை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாமில் நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் கூறியதாவது;-

முதலமைச்சர் மதுரை மாவட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறார். குறிப்பாக இந்த தொற்றுநோயை முற்றிலும் அழிக்கும் வண்ணம் கூடுதலாக இரண்டு நாட்களாக முழு ஊரடங்கை பிறப்பித்து இதில் காய்ச்சல் முகாமை அதிகப்படுத்தி உள்ளார்.மதுரை மாநகராட்சி பகுதிகளில் முதலமைச்சர் அறிவுரைப்படி வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 16 நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் காலை 2 இடங்களிலும், மாலை 2 இடங்களிலும் என நாள் ஒன்றுக்கு மொத்தம் 104 இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்களும், இ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் மருந்தகம் மூலம் காலை மற்றும் மாலை என 12 இடங்களிலும், சித்தா மற்றும் ஆயுர்வேத முகாம் மூலம் காலை மற்றும் மாலை என 8 இடங்களிலும் என மொத்தம் 155 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

தற்போது நடைபெறும் இந்த முகாமில் பந்தடி 1-வது தெரு, காமராஜர் சாலை, நவரத்தினபுரம், பழைய குயவர்பாளையம், அந்தோணியார் கோவில் தெரு பகுதிகளில் நடைபெற்று வரும் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாமில் காய்ச்சல் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, சளி பரிசோதனை செய்வதையும், மாநகராட்சி நடமாடும் வாகனம் மூலம் மாதிரி சேகரிப்பு பரிசோதனை மேற்கொள்வதையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே 3 நடமாடும் வாகனம் மூலம் மாதிரி சேகரிப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மேலும் 8 நடமாடும் வாகனம் மூலம் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்களும் இந்த காய்ச்சல் முகாம்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். அதுமட்டுமல்லாது இங்கு வரும் அனைவருக்கும் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல் கண்காணிப்பு பணியை மேற்கொள்வதை செய்து வருகின்றனர். காய்ச்சல் கணக்கெடுப்பு பணியின் போது யாருக்காவது காய்ச்சல் இருந்தால் உடனே பரிசோதனை கொள்ளப்படுகிறது. மதுரை தெற்கு தொகுதி மக்களின் நலன் கருதி இந்த முகாமினை செய்து கொடுத்த முதலமைச்சருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் விசாகன், நகர்நல அலுவலர் குமரகுருபரன், உதவி ஆணையாளர் ரவிச்சந்திரன், மருத்துவ கண்காணிப்பாளர் இஸ்மாயில் பாத்திமா, சுகாதார அலுவலர் வீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.