தற்போதைய செய்திகள்

வீட்டிலிருந்து வீரவசனம் பேசுவது ஸ்டாலின் வாடிக்கை – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடும் தாக்கு

மதுரை

வீட்டில் இருந்து கொண்டு வீரவசனம் பேசுவது ஸ்டாலின் வாடிக்கை என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறி உள்ளார்.

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க, கழக இலக்கிய அணி சார்பில் வில்லாபுரத்தில், கழக இலக்கிய அணி இணை செயலாளர் வில்லாபுரம் ஆர்.கே.ரமேஷ் தலைமையில் 500 பேருக்கு அரிசி, காய்கறி, சமையல் தொகுப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

இ்ந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

கடந்த 50 நாட்களுக்கு மேலாக முதலமைச்சர் அரசின் சார்பில் தொடர்ந்து பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். அதனைத் தொடர்ந்து கழகத்தின் சார்பிலும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி கடந்த 30 நாட்களுக்கு மேலாக தொய்வின்றி நிவாரணபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மதுரையில் 12 அம்மா உணவகத்தின் மூலம் ஏழை எளியோருக்கு விலை இல்லாமல் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

பொது வினியோகத் திட்டத்தின் மூலம் ஏற்கனவே 20 கிலோ அரிசி வாங்கினால் 40 கிலோ வழங்கப்படவுள்ளது, அதேபோல் 25 கிலோ அரிசி வாங்கினால் 50 கிலோ அரிசி வழங்கப்படவுள்ளது. இந்தியாவிலேயே பொது விநியோகத் திட்டத்தில் விலையில்லா அரிசி வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டும் தான். ஆனால் ஸ்டாலின் ஏதாவது ஒரு பொய்யை சொல்லிக் கொண்டு வருகிறார்.

அவர்கள் ஆட்சியில் இதுபோல நலத்திட்டம் செய்தது உண்டா? வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஒன்றிணைவோம் என்ற பெயரில் எங்கே ஒரு மூலையில் கொடுப்பதை மிகைப்படுத்தி காண்பிக்கிறார்கள். ஓட்டுக்காக தான் மக்களுக்கு நாங்கள் கொடுக்கிறோம் என்று ஒரு திமுக நிர்வாகியே சொல்லியுள்ளார். நாங்கள் அப்படி இல்லை மக்கள் தான் எங்கள் எஜமானர்கள்.

புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மாவும் கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்கள் ஆவர். அவர்கள் வழிய வந்த முதலமைச்சரும், மக்களுக்கு பல மடங்கு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். கடந்த தை திருநாளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கினார். தற்போது இந்த தடை காலத்திலும் ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கி கடந்த மூன்று மாதங்களாக விலையில்லாமல் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை வழங்கி வருகிறார்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது வீட்டிலிருந்து வீரவசனம் பேசுவது, ஆட்சிக்கு வந்தால் மக்களை மறப்பது இதுதான் திமுகவின் வாடிக்கையாகும் அதை அப்படியே ஸ்டாலின் செயல்படுத்துகிறார்.

இந்த தடை காலத்திலும் விவசாயிகளின் உற்பத்தி அதிகரிக்கவேண்டும் என்று, விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் செய்து வருகிறார். முதலமைச்சரின் இரக்க குணம் மிகவும் இன்றியமையாததாகும்

இந்த தடை காலத்தில் உரத்தட்டுப்பாடு இல்லை, வேண்டிய அளவில் ரசாயன உரங்களும், இயற்கை உரங்களும் இருப்பு உள்ளது. இந்த ஆண்டிற்கு மட்டும் விவசாயிகளுக்கு பயிர்கடன் 11,000 கோடி ரூபாயை முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார். இதே திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு வழங்கிய மொத்த பயிர் கடன் மட்டும் 9,163 கோடி ரூபாய் ஆகும். இதன் மூலம் யார் அதிகளவில் விவசாயிகளுக்கு நன்மை செய்தவர்கள் என்று இது ஒரு சாட்சியாகும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர் மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எஸ்.டி.ஜெயபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.