தமிழகம்

இடைத்தேர்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை – தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை

தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

குடியாத்தம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ காத்தவராயன், திருவெற்றியூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி ஆகியோர் மறைவைத்தொடர்ந்து, இரண்டு தொகுதிகளும் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் மார்ச் 1ம்தேதி அறிவித்தது. தி.மு.க. எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் மறைந்ததையடுத்து, அவருடைய சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது:-

வாக்குப்பதிவு இயந்திரங்களை இடைத்தேர்தலுக்கு தயார் செய்வது தொடர்பாக கடந்த வாரம் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேதி முடிவு செய்யவில்லை என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளது

தேர்தல் ஆணைய விதிப்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சோதனைகளை முடித்து தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.