தமிழகம்

ஊழியர்களின் வருகை பதிவேட்டை கண்டிப்புடன் வரைமுறைபடுத்த அரசு முடிவு

சென்னை

ஊழியர்களின் வருகை பதிவேட்டை கண்டிப்புடன் வரைமுறைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழக ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தனது துறையின் மற்ற அனைத்து அதிகாரிகளுக்கும் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் பாதியளவு பணியாளர்களுடன் இயங்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது. அரசுப் பணிகளை வேகப்படுத்தவும், தேங்கியுள்ள அரசுக் கோப்புகளை விரைவாக தீர்த்து வைக்கவும், பணியாளர்கள் வருகைப் பதிவேட்டில் சரியான வரைமுறையை கண்டிப்புடன் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

எனவே நீங்கள் அனைவரும் வருகைப் பதிவேட்டு விபரங்களை தினமும் காலை 10.30 மணிக்கு முன்பதாக எனக்கு அனுப்பி வைக்க வேண்டும். 13-ந்தேதியில் (நேற்று) இருந்து இந்த உத்தரவு முறை பின்பற்றப்பட வேண்டும். அந்த வருகைப் பதிவேட்டு விவரங்கள் அனைத்தும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.