தற்போதைய செய்திகள்

வெளிநாட்டிலிருந்து வரும் அனைவருக்கும் முழுமையான பரிசோதனை – முதலமைச்சர் தகவல்

சென்னை

வெளிநாட்டிலிருந்து வரும் அனைவருக்கும் முழுமையான பரிசோதனை செய்யப்படுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி: அதிமுக கூட்டணி தொடருமா…

பதில்: அடிக்கடி எல்லா பத்திரிகைகளிலும், ஊடகத்திலும் சொல்கிறோம், எங்களுடைய கூட்டணி தொடர்கிறது.

கேள்வி: வெளிநாடுகளிலிருந்து வருபவர்களால் மீண்டும் கொரோனா தொற்று பரவுவது குறித்து…

பதில்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, வெளிநாட்டிலிருந்து வருகின்றவர்களை எல்லாம் முழுமையாக பரிசோதனை செய்துதான் அனுமதிக்கிறோம். இன்று கூட பரிசோதனையில் தொற்றுள்ளவரை கண்டுபிடித்திருக்கிறோம். உடனடியாக Quarantine செய்திருக்கிறோம். ஆகவே, பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பது மிகமிக முக்கியம். இதை நாட்டு மக்கள் உணர வேண்டும். வளர்ந்து வந்த நாடுகளிலேயே இதை சரியான முறையில், அதாவது அரசு சொன்ன வழிமுறைகளை கடைபிடிக்காத காரணத்தால் மீண்டும் கொரோனா வைரஸ் தொடங்கியிருக்கிறது.

நமது பகுதியில் யாருமே முகக்கவசம் அணிவதில்லை. முகக்கவசம் அணிவது மிக மிக முக்கியம் என்று நாங்களும் பலமுறை சொல்லிக் கொண்டேயிருக்கிறோம். கொரோனா வைரஸ் நோய் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதாக பரவக்கூடியது. இதை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், ஒட்டுமொத்த மக்களும் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும். அரசு அறிவித்த வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டுமென்று கேட்டு விடைபெறுகின்றேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.